வட இந்தியர்கள் மீதான வெறுப்பு பேச்சு: திமுக அமைச்சருக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்

திமுக அமைச்சர் உடனடியாக மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கோரவேண்டும் என தெரிவித்துள்ளார்.
வட இந்தியர்கள் மீதான வெறுப்பு பேச்சு: திமுக அமைச்சருக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்
Published on

சென்னை,

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

வட இந்தியர்கள் மீதான வெறுப்புணர்வைத் தூண்டும் திமுக தலைவர்கள். திமுக ஆட்சியில் ஏற்கனவே வட இந்தியர்கள் மீதான தாக்குதல்கள் தலைவிரித்தாடிக் கொண்டிருக்கும் நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் “பானிபூரி விற்கவும், கட்டட வேலைக்கும், டேபிள் துடைக்கவும் தான் வடக்கர்கள் தமிழகத்திற்கு வருகிறார்கள்” எனத் திமுக அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் எள்ளி நகையாடியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். தனது ஆணவப்பேச்சிற்குத் திமுக அமைச்சர் உடனடியாக மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கோரவேண்டும்.

“யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற வாழ்வியல் தத்துவத்தின் மூலம் சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும் பறைசாற்றிய நமது தமிழ் மண்ணில், வட இந்தியர்கள் மீதான வெறுப்புணர்வைத் திமுக தலைவர்கள் தொடர்ந்து விதைக்க முயல்வது அருவருப்பானது மட்டுமன்றி ஆபத்தானதும் கூட. வடக்கு, தெற்கு என இன ரீதியாக மக்களைப் பிரித்தாளத் துடிக்கும் திமுகவின் பிளவுவாத அரசியலை அதன் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸும் கம்யூனிஸ்டு கட்சிகளும் ஆமோதிக்கின்றனவா?


“இமயம் முதல் குமரி வரை” ஒருமித்த பண்பாட்டுக் கலாச்சாரத்தைப் பகிர்ந்துகொள்ளும் நமது பாரதத்தில், ஆட்சியைப் பிடிக்கவும் அதிகாரத்தைக் கைப்பற்றவும் வட இந்திய மக்களைப் பகடைக்காய்களாகப் பயன்படுத்தத் துடிக்கும் திமுக எனும் நஞ்சுக்கொடியை வரும் சட்டமன்றத் தேர்தலில் மக்கள் பிடுங்கி எறியப்போகிறார்கள். என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com