பொங்கல் பரிசு ரூ.3 ஆயிரம் இன்னும் வாங்கவில்லையா?: அப்படியென்றால் இந்த தகவல் உங்களுக்குத்தான்

பலர் பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் பயணம் மேற்கொண்டதால், இந்தப் பணி முழுமை பெறவில்லை.
சென்னை,
தமிழகத்தில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகளில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு ஆகியவற்றுடன் ரூ.3 ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில், 2.22 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறும் வகையில் இந்த திட்டத்தை கடந்த 8-ந் தேதி சென்னை ஆலந்தூரில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். அன்று முதல் ஒவ்வொரு கடைகளிலும் தினமும் சுமார் 300 பேருக்கு டோக்கன் வழங்கப்பட்டு பொங்கல் பரிசு கொடுக்கப்பட்டு வந்தது. பயனாளிகள் யாரும் விடுபட்டுவிடக்கூடாது என்ற வகையில், போகிப் பண்டிகையான 14-ந் தேதியும் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.
ஆனாலும், பலர் பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் பயணம் மேற்கொண்டதால், இந்தப் பணி முழுமை பெறவில்லை. 90 சதவீதத்திற்கு அதிகமானோர் பொங்கல் பரிசு பெற்றபோதிலும், சிலர் இன்னும் வாங்காமல் இருக்கின்றனர். எனவே, அவர்கள் ஊர் திரும்பியதும் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பை தமிழக அரசு ஓரிரு நாளில் வெளியிட இருக்கிறது. அனேகமாக, இம்மாதம் இறுதி வரை பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.3 ஆயிரம் ரொக்கம் வழங்கப்பட வாய்ப்பு இருக்கிறது.






