பரிகாரம் செய்ய வந்த பெண்களுடன் உல்லாசம்: சிறுமியை சீண்டியதால் அம்பலமான சாமியாரின் தந்திரம்...!

கைது செய்யப்பட்ட நபரின் லேப்டாப்பில் பெண்கள் மற்றும் பள்ளி சிறுமிகளின் ஆபாச படங்கள் இருந்தன.
சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த சாமியார்
Published on

சேலம்,

வாழப்பாடி அருகே பரிகாரம் செய்வதாக கூறி பெண்கள் மற்றும் சிறுமிகளை ஏமாற்றி பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாக கூறப்படும் நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சிறுமிக்கு பாலியல் தொல்லை

சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த வெள்ளாளக்குண்டம் பகுதியைச் சேர்ந்தவர் விஜயராஜா. இவர், பிரிட்ஜ் மற்றும் வாஷிங் மெஷின் உள்ளிட்ட மின்சாதனங்களை பழுதுபார்க்கும் கடை நடத்தி வருகிறார். மேலும், தான் ஆன்மிகவாதி என்றும், பல்வேறு தோஷங்களுக்கு பரிகாரம் செய்வதாகவும் கூறி வந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில், அவரது கடைக்கு சென்ற சிறுமி ஒருவரிடம் பாலியல் ரீதியாக சீண்டியுள்ளார். இதனை சிறுமி தனது பெற்றோரிடம் சென்று கூறியுள்ளார். உடனடியாக பெற்றோர்கள் இது குறித்து வாழப்பாடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

குற்றவாளி கைது

பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விஜயராஜாவை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது, அவர் பரிகாரம் செய்வதாக கூறி, தன்னிடம் உதவி நாடி வந்த பெண்களிடம் உல்லாசமாக இருந்துள்ளார் எனும் தகவல் போலீசாருக்கு கிடைத்தது. மேலும், விஜயராஜா பயன்படுத்திய லேப்டாப்பை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது 50-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் பள்ளி சிறுமிகளின் ஆபாச படங்கள் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து, லேப்டாப் மற்றும் செல்போனை போலீசார் பறிமுதல் செய்து, சைபர் கிரைம் போலீசாரின் உதவியுடன் ஆய்வு செய்து வருகின்றனர்.

இதில் பாதிக்கப்பட்டவர்கள் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களா அல்லது வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக பரிகாரம் செய்வதாக கூறி பெண்களிடம் உல்லாசமாக இருந்து, அதை பதிவு செய்து பெண்களை மிரட்டியுள்ளாரா என்பது குறித்தும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com