விழுப்புரம் பஸ் நிலையத்தில் ரூ.1.60 கோடி ஹவாலா பணம் பறிமுதல்

விழுப்புரம் பஸ் நிலையத்தில் ஹவாலா பணத்தை கடத்த முயன்ற 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
விழுப்புரம்,
விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் கட்டுக்கட்டாக பணம் பதுக்கி வைத்து இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்ற போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது, திருச்சி செல்வதற்காக விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் ஒரே மாதிரியான பைகளுடன் சந்தேகப்படும்படி 4 பேர் நின்றுள்ளனர். இதனால் அவர்கள் மீது சந்தேகமடைந்த போலீசார் அவர்களை அழைத்து விசாரித்துள்ளனர். விசாரணையில் அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால் அவர்களின் பைகளை போலீசார் சோதனையிட்டனர்.
அந்த சோதனையில் 4 பைகளிலிருந்து மொத்தம் ரூ.1.60 கோடி ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து, பணத்துடன் வந்த 4 பேரை கைது செய்த போலீசார் யாருடைய பணம்? எங்கிருந்து எந்த பகுதிக்கு பணம் கொண்டு செல்லப்படுகிறது? என்பது குறித்து பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை பிராட்வேயில் பணத்தைப் பெற்று கொண்டு செல்லும் வழியில் சிக்கினர் என போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கைதானவர்கள் திருச்சியை சேர்ந்த முகமது ரியாஸ், சிராஜிதியூன், சித்திக் மற்றும் ராஜ் முகமது என அடையாளம் காணப்பட்டுள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை வருமான வரித்துறையிடம் ஒப்படைக்க போலீசார் திட்டம்.






