

கடலூர்,
கடலூர் ஆல்பேட்டை சோதனைச் சாவடியில் நேற்று மதியம் 12.30 மணி அளவில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சென்னையில் இருந்து கும்பகோணம் நோக்கி அரசு சொகுசு பஸ் வந்துகொண்டிருந்தது. அந்த பஸ்சை போலீசார் வழிமறித்து சோதனை செய்தனர்.
அப்போது அந்த பஸ்சில் வந்த வாலிபர் ஒருவரின் பையையும் போலீசார் சோதனையிட்டனர். அந்த பையில் 2 ஆயிரம் மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக இருந்தன. மொத்தம் ரூ.26 லட்சம் இருந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் அந்த வாலிபரையும், பணத்தையும் கடலூர் புதுநகர் போலீசில் ஒப்படைத்தனர்.
செல்போன் கடை ஊழியர்
போலீசார் அந்த வாலிபரிடம் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் சென்னை மண்ணடியை சேர்ந்த காஜா (வயது 27) என்றும், அவர் சென்னையில் ஒரு செல்போன் கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது.
அப்போது அவருக்கு நண்பரான சென்னை ராயபுரத்தை சேர்ந்த பாரூக் என்பவர் தான் கொடுக்கும் பணத்தை 3 பேரிடம் கொடுத்தால் ரூ.3 ஆயிரம் தருவதாக கூறியதாகவும், அதை நம்பி ரூ.26 லட்சத்தை அரசு சொகுசு பஸ்சில் கொண்டு வந்ததாகவும் தெரிவித்தார். ஆனால் அந்த பணத்திற்கான எவ்வித ஆவணமும் அவரிடம் இல்லை.
ரூ.26 லட்சம் பறிமுதல்
அந்த பணத்தை கடலூர் முதுநகரை சேர்ந்த பெருமாள் என்பவருக்கு ரூ.5 லட்சமும், நாகூரை சேர்ந்த ராஜாவுக்கு ரூ.10 லட்சமும், காரைக்காலை சேர்ந்த ஜெயாலுதீனுக்கு ரூ.11 லட்சமும் கொடுப்பதற்காக கொண்டு வந்ததாகவும் அவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். அது ஹவாலா பணம் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து காஜாவை போலீசார் கைது செய்து, ரூ.26 லட்சத்தையும் பறிமுதல் செய்தனர்.
அந்த பணம் வருமான வரித்துறையினரிடம் ஒப்படைக்கப்படும் என்று போலீசார் கூறினர்.
சாராயம், மது கடத்தலை தடுப்பதற்காக போலீசார் நடத்திய சோதனையில் வாலிபரிடம் ரூ.26 லட்சம் பிடிபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.