வாழ்நாள் எல்லாம் விவசாயிகளுக்காக போராடியவர்.. தகைசால் தமிழர்: நல்லகண்ணு வாழ்க்கை குறிப்பு

அரசியலில் தூய்மையானவராக இருந்த நல்லக்கண்ணு எப்போதும் பதவி, பணம் ஆகியவற்றின் மீது பற்றற்றவராக இருந்தார்.
வாழ்நாள் எல்லாம் விவசாயிகளுக்காக போராடியவர்.. தகைசால் தமிழர்: நல்லகண்ணு வாழ்க்கை குறிப்பு
Published on

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான நல்லகண்ணு (வயது 101) இன்று காலமானார். மகத்தான தலைவரான நல்லகண்ணுவின் வாழ்க்கை பயணம் குறித்த விவரங்கள் பின்வருமாறு:

1924 ஆம் ஆண்டு ஸ்ரீவைகுண்டத்தில் பிறந்தார் நல்லக்கண்ணு. சுப்பிரமணிய பாரதி மற்றும் வ.ஊ. சிதம்பரம்பிள்ளை ஆகியோரால் சுதந்திர வேட்கை கொண்டு சிறிய வயதில் பல போராட்டங்களில் பங்கேற்றவர். நெல் மூட்டை பதுக்கலுக்கு எதிராக தனது சொந்த ஊரில் போராட்டத்தை தொடங்கிய நல்லக்கண்ணுவுக்கு அப்போது வயது 18. அந்த வயதிலேயே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். அப்போதிலிருந்து தொடர்ந்து தன்னலமின்றி மக்களுக்காக குரல் கொடுத்து வந்தார்.

கட்சி சார்பில் தனக்கு வழங்கப்பட்ட ஒரு கோடி ரூபாய் நிதியை கட்சியின் வளர்ச்சிக்காக மீண்டும் கட்சிக்கே திருப்பிக் கொடுத்தவர் தோழர் நல்லக்கண்ணு; பக்குவமான பண்புகளால் நிரம்பியவர். செல்வந்த குடும்பத்தில் பிறந்தாலும் கடைசிவரை போராட்ட குணத்தை கைவிடாமல் இருந்தார். இயற்கை வளங்களை காக்க தொடர்ந்து போராடினார். 2022 ஆம் ஆண்டு இவருக்கு ‘தகைசால் தமிழர்’ விருதை தமிழ்நாடு அரசு வழங்கியது. சாதிய அநீதிகளுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார். 1999-ல் கோவை மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட நல்லக்கண்ணு தோல்வி அடைந்தார். சி.பி. ராதாகிருஷ்ணன்னை எதிர்த்து போட்டியிட்டார்.

அரசியலில் தூய்மையானவராக இருந்த நல்லக்கண்ணு எப்போதும் பதவி, பணம் ஆகியவற்றின் மீது பற்றற்றவராக இருந்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளராக 13 ஆண்டுகள் பதவி வகித்தார். விவசாயத் தொழிலாளர் சங்கத் தலைவராக 25 ஆண்டுகள் இருந்துள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் கிளைச் செயலாளர் பதவியிலிருந்து தேசிய செயற்குழு உறுப்பினர் பதவி வரை வகித்துள்ளார்.

தாமிரபரணியில் சட்டவிரோதமாக மணல் அள்ளுவதை எதிர்த்து தனது 93 வயதில் வழக்குத் தொடுத்து அதற்கு தடை பெற்றார். தகைசால் தமிழர் விருதுடன் அரசு வழங்கிய ரூ.10 லட்சத்துடன் ரூ.5 ஆயிரம் சேர்த்து முதல் அமைச்சர் நிவாரண நிதிக்கே திருப்பி கொடுத்தார். வாழ்நாள் எல்லாம் பொதுவுடமை கொள்கையில் உறுதியாக நின்று, இயற்கை வளங்களை காக்கவும் போராடிய தகைசால் தமிழர் நல்லகண்ணு இன்று இந்த பூவுலகில் இருந்து விடை பெற்றுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com