இப்போதுதான் படிக்கிறார்...விஜய் முதலில் பரீட்சை எழுதட்டும் - ஆர்.பி. உதயகுமார் விமர்சனம்

திமுகவிற்கும் - தவெகவிற்கும்தான் போட்டி என்று விஜய் பதிவு செய்து வருகிறார்.
விருதுநகர்,
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சியைத் தொடங்கிய நடிகர் விஜய், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். கடந்த வாரம் திருச்சியில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய விஜய், நேற்று நாகை, திருவாரூர் மாவட்டங்களில் மக்களைச் சந்தித்து பிரசாரத்தில் ஈடுபட்டார். திமுகவை தனது அரசியல் எதிரி என்றும், பாஜக-வை தனது கொள்கை எதிரி என்றும் கூறி வரும் தவெக தலைவர் விஜய் தனது முதல் அரசியல் மாநாடு முதல் தற்போதைய தேர்தல் பரப்புரையிலும் செல்லும் இடமெல்லாம் வரும் சட்டமன்ற தேர்தலில் திமுகவிற்கும் - தவெகவிற்கும்தான் போட்டி என்று மீண்டும் மீண்டும் பதிவு செய்து வருகிறார்.
இந்தநிலையில், இது தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது,
ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். மக்களை சந்திக்கலாம். மக்களிடத்திலே அவர்கள் ஆதரவை கேட்கலாம். தி.மு.க.விற்கும், த.வெ.க.விற்கும் போட்டியென விஜய் அறியாமல், தெரியாமல் பேசுகிறார். விஜய் பரீட்சை எழுதாமல் பாஸாகி விடுவேன் என சொல்கிறார். அது அவருடைய நம்பிக்கை. விஜய் பரீட்சை எழுதட்டும், அவர் என்ன மதிப்பெண் எடுக்கிறார் என்று பார்த்துவிட்டு பிறகு அதைப்பற்றி விவாதிக்கலாம்.
விஜய் இப்போதுதான் படித்துக்கொண்டு இருக்கிறார். பரீட்சை எழுதி மதிப்பெண் பெறட்டும். ஆசிரியர்கள் மாணவர்கள் கேட்கும் கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் பதில் சொல்வார்கள். ஆனால் மாணவர் பாஸ் ஆவாரா? இல்லையா? என்பது மதிப்பெண் வந்தால்தான் நமக்கு தெரியும்.
அ.தி.மு.க. தான் தி.மு.க.வை வீழ்த்துகிற சக்தியும், ஆற்றலும், வலிமையும், அனுபவமும், கிளைக்கழகமும், தொண்டர்களும், மக்கள் செல்வாக்கும் கொண்ட கட்சி. எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. தி.மு.க.வை வெல்லும்.என தெரிவித்தார்.






