யாசகம் பெற்று வாழ்ந்தவர் சாமி சிலைகளால் அடித்துக்கொலை

தென்காசியில் யாசகம் பெற்று வாழ்ந்தவர், சாமி சிலைகளால் முதியவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
யாசகம் பெற்று வாழ்ந்தவர் சாமி சிலைகளால் அடித்துக்கொலை
Published on

தென்காசி மேலப்புலியூரை சேர்ந்தவர் சங்கரநாராயணன் (வயது 53). இவர் பல்வேறு இடங்களில் யாசகம் பெற்று வந்தார். தென்காசி யானை பாலம் பகுதியில் உள்ள கோவில் மண்டபத்தில் தங்கி இருந்தார்.

நேற்று அவர் தலையில் பலத்த ரத்தக்காயங்களுடன் பிணமாக கிடந்தார். இதுகுறித்து அந்த வழியாக சென்றவர்கள் தென்காசி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். சங்கரநாராயணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அடித்துக் கொலை

தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். அதில், சங்கரநாராயணன் பிணமாக கிடந்த இடத்திலும், அவர் மீதும் கற்களால் செய்யப்பட்ட சாமி சிலைகள் கிடந்துள்ளது. இதனால் மர்மநபர்கள் சாமி சிலைகளால் தாக்கி சங்கரநாராயணனை கொலை செய்தது தெரியவந்தது.

அவரை கொலை செய்த மர்மநபர்கள் யார்? எதற்காக கொன்றனர்? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

X

Daily Thanthi
www.dailythanthi.com