

ஓட்டப்பிடாரம்:
ஓட்டப்பிடாரம் அருகே அருங்குளம் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் சேகர் (வயது 66) இவரது மகள் நேற்று வீட்டில் இருந்தபோது அவரது வீட்டிற்கு வந்த பீகார் மாநிலம் ரகுநாத்பூர் பகுதியை சேர்ந்த சிவநந்தன் மகன் சோனுகுமார் (22) என்பவர் தங்கநகையை பாலிஷ் செய்து தருவதாக கூறி உள்ளார். அவரும் 2 பவுன் சங்கிலியை நகை பாலிஷ் போடுவதற்கு கொடுத்துள்ளார். நகையை வாங்கி அவர், சற்று நேரத்தில் பாலிஷ் போட்டு வருவதாக வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார். இதனால் சுதாரித்து கொண்ட அந்த பெண், தந்தையிடம் கூறியுள்ளார். அவரும், அக்கம் பகத்தினரும் திரண்டு சென்று சோனுகுமாரை துரத்தி சென்று மடக்கி பிடித்து எப்போதும்வென்றான் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரபாண்டியன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து சோனுகுமாரை கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ.70 ஆயிரம் மதிப்புள்ள 2 பவுன் சங்கிலியையும் போலீசார் மீட்டனர்.