ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய ஊழியர் அதிரடி கைது

சுரண்டை அருகே புதிய வீட்டிற்கு மின்இணைப்பு வழங்க ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய ஊழியர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய ஊழியர் அதிரடி கைது
Published on

சுரண்டை:

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள பாண்டியாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கருப்பசாமி மகன் அருணாசலம் (வயது 28). இவர் தனக்கு சொந்தமான இடத்தில் புதிதாக வீடு கட்டி வருகிறார்.

இந்த வீட்டிற்கு மின் இணைப்பு கேட்டு கடந்த 28-ந் தேதி ஆன்லைன் மூலம் பணம் கட்டி விண்ணப்பித்து இருந்தார்.

ரூ.4 ஆயிரம் கேட்டார்

இந்த விண்ணப்பத்தை சேர்ந்தமரம் மின்வாரியத்தில் போர்மேனாக பணியாற்றும் பாம்புகோவில் சந்தை அருகே உள்ள வேட்டரம்பட்டி செக்கடி தெருவை சேர்ந்த ரத்தினம் சரிபார்த்தார். பின்னர் அவர், அருணாசலத்தை தொடர்பு கொண்டு அலுவலகத்திற்கு வரும்படி கூறினார்.

அங்கு வைத்து ரத்தினம் கூறியதன் பேரில் ஆன்லைனில் ரூ.25,500-ஐ அருணாசலம் கட்டினார். ஆனாலும் புதிய மின்கம்பம் அமைத்து மின் இணைப்பு கொடுப்பதற்காக தனக்கு ரூ.4 ஆயிரம் தர வேண்டும் என்று ரத்தினம் கேட்டதாக கூறப்படுகிறது.

அதிரடி கைது

ஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத அருணாசலம் தென்காசி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு அலுவலகத்தில் இதுதொடர்பாக புகார் தெரிவித்தார். அதன்பேரில் அதிகாரிகள் ரசாயனம் தடவிய ரூ.4 ஆயிரத்தை அருணாசலத்திடம் கொடுத்து அனுப்பினர்.

நேற்று அந்த பணத்தை மின்வாரிய அலுவலகத்தில் இருந்த ரத்தினத்திடம் கொடுத்தபோது, அங்கு மறைந்து இருந்த ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு துணை சூப்பிரண்டு பால்சுதர் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு துறை இன்ஸ்பெக்டர் ஜெயஸ்ரீ, சப்-இன்ஸ்பெக்டர் ரவி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தெய்வ கனி அடங்கிய குழுவினர் கையும், களவுமாக பிடித்தனர். பின்னர் ரத்தினத்தை அதிரடியாக கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பரபரப்பு

சுரண்டை அருகே ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய ஊழியர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com