படப்பை அருகே ரவுடி வெட்டிக்கொலை - வீட்டுக்குள் பிணமாக கிடந்தார்

படப்பை அருகே ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
படப்பை அருகே ரவுடி வெட்டிக்கொலை - வீட்டுக்குள் பிணமாக கிடந்தார்
Published on

சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் பகுதியை சேர்ந்தவர் மோகன் என்கிற மோகன்ராஜ் (வயது 26). ரவுடியான இவர் காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அடுத்த ஆதனூர் டி.டி.சி. நகர் முதல் தெருவில் மீன் வியாபாரியுடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார். நேற்று அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசிய நிலையில் அந்த பகுதி மக்கள் இது குறித்து மணிமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மணி மங்கலம் போலீஸ் உதவி கமிஷனர் ரவி, இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். மோகன்ராஜ் முகம் சிதைந்த நிலையில் வெட்டிக்கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரியவந்தது.

போலீசார் மோகன்ராஜின் உடலை மீட்டு பிரேத பிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீஸ் விசாரணையில் மோகன்ராஜ் மீது சென்னை புறநகர் பகுதியில் உள்ள போலீஸ் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. பம்மல் பகுதியில் இருந்து மோகன்ராஜ் இந்த பகுதிக்கு எப்போது வந்து தங்கினார். இந்த பகுதியில் வந்து வசிப்பதற்கு என்ன காரணம்?, கொலைக்கான காரணம்? முன்விரோதம் காரணமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஊராட்சி மன்ற தலைவர்கள், தொழில் அதிபர்கள், ரவுடி கும்பலால் பணம் கேட்டு அடிக்கடி மிரட்டப்படுகின்றனர். கடந்த ஆண்டு மாடம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் ரவுடி கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். கடந்த ஜூலை மாதம் தி.மு.க. பிரமுகர் ஒருவரை மர்ம கும்பல் வெட்டிவிட்டு தப்பிச்சென்றது. இது போன்ற சம்பவங்கள் நடைபெற்று வந்த நிலையில் கடந்த ஆகஸ்டு மாதம் கூடுவாஞ்சேரி அருகே சோட்டா வினோத், ரமேஷ் என 2 ரவுடிகளை போலீசார் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொன்றது குறிப்பிடதக்கது.

ஆதனூர் பகுதியில் தொடர்ந்து குற்ற சம்பவங்கள் நடைபெற்று வருவதாலும் தொடர்ந்து ரவுடிகள் நடமாட்டம் அதிகரித்து வருவதாலும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

மேலும் இந்த கொலை வழக்கில் தொடர்புடைய நபர்களை போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com