'தந்தையை கொச்சைப்படுத்துபவர்'... அன்புமணிக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பதிலடி

விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றவர்களை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரில் பார்த்து ஆறுதல் கூறினார்.
சென்னை,
கரூர் வேலுசாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பிரசாரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானார்கள். படுகாயம் அடைந்தவர்கள் கரூர் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விஜய் பிரசாரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி மயக்கமடைந்து அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தவர்களை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரில் பார்த்து ஆறுதல் கூறினார். அத்துடன் இறந்தவர்கள் உடல்களையும் சென்று பார்த்தார். அதில் சிலர் பள்ளி மாணவர்களாக இருந்தனர்.
ஆஸ்பத்திரியில் இருந்து வெளியே வந்த அமைச்சர் அன்பில் மகேஷ் 'அய்யோ... எல்லாம் சின்னச்சின்ன பிள்ளைங்க.. படித்து, படித்து சொன்னாங்க... கண்டிசன்களை பாலோ பண்ணுங்கடா... கண்டிசன்களை பாலோ பண்ணுங்கடானு... 36 பேருடன் நின்றால் சரி... என்று கூறி கதறி அழுதார். அவருக்கு முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி ஆறுதல் கூறினார்.
இந்த நிலையில், தவெக கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டு, கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அதன்பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில், “கரூரில் உயிரிழந்தவர்களை பார்த்து அழுது புலம்பிய அமைச்சருக்கு ஆஸ்கர் விருது கொடுக்கலாம் என்றும் கள்ளக்குறிச்சிக்கு சென்று பார்க்காத முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நள்ளிரவில் கரூர் சென்றார் எனவும் நீதிமன்றமே குழு அமைத்து விசாரிக்க வேண்டும் அல்லது சிபிஐ விசாரிக்க வேண்டும் என கூறினார்.
இந்நிலையில், அன்புமணி ராமதாஸ் கருத்துக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-
மரியாதைக்குரிய அண்ணன் அன்புமணி ராமதாஸ் நாகரீகமற்று கொச்சையாகப் பேசி இருக்கிறார். கரூர் கூட்ட நெரிசலில் இறந்தவர்களில் 9 பேர் பள்ளிக்குச் செல்லும் வயதிலும், எதிர்காலத்தில் பள்ளிக்குச் செல்ல வேண்டிய வயதிலும் உள்ள எங்கள் பிஞ்சு குழந்தைகள் அவர்களை என்னுள் ஒருவராக கருதுகிறேன். என்னை மக்களில் ஒருவராக கருதுகிறேன். ஆறுதல் தேடும் கோடி மனங்களில் நானும் ஒருவன்.
எங்கள் தலைவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சொல்வதுபோல “எந்தத் தலைவரும் தன் ஆதரவாளர் இறப்பதை விரும்பமாட்டார்!”. தலைவரின் வழியில் பயணிக்கும் நாங்கள் மக்களின் பக்கம் நிற்கிறோம். ஆறுதல் தேடுகிறோம். ஆறுதல் சொல்கிறோம். வளர்த்து ஆளாக்கிவிட்ட சொந்த தந்தையை கூட கொச்சைப் படுத்துபவரின் கருத்தை இனிமேல் பொருட்படுத்த தேவையில்லை என்றே கருதுகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






