

திருச்சி,
திருச்சி மாவட்டம் முசிறி அருகே அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்ட முதல் பருவ பாடப்புத்தகங்களை திரும்பப் பெற்று, பழைய பேப்பர் கடையில் எடைக்கு விற்பனை செய்த தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
திருச்சி மாவட்டம் முசிறி அருகே தும்பலம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 75-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்களுக்கு அரசு சார்பில் விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், தற்போது முதல் பருவத்தேர்வு முடிவடைந்து, இரண்டாம் பருவத்துக்கான பாடப்புத்தகங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
இதற்கிடையே, முதல் பருவத்தேர்வு முடிவடைந்ததும் மாணவர்களிடம் இருந்து அரசு இலவசமாக வழங்கிய முதல் பருவ பாடப்புத்தகங்களை பள்ளியின் தலைமை ஆசிரியை மஞ்சுளா திரும்பப் பெற்றுள்ளார். பின்னர் அந்த புத்தகங்களை பழைய பேப்பர் வியாபாரியிடம் எடைக்கு விற்பனை செய்ததாக கூறப்படுகிறது.
அரசு சார்பில் மாணவர்களின் கல்விக்காக இலவசமாக வழங்கப்பட்ட பாடப்புத்தகங்கள் இவ்வாறு விற்பனை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுகுறித்து தகவல் அறிந்தவர்கள் பள்ளிக்கு சென்று விசாரித்தனர். அப்போது, பள்ளியில் கொசுக்களின் உற்பத்தி அதிகரித்து டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்படாமல் தடுக்கும் நோக்கில், பழைய பாடப்புத்தகங்களை எடைக்கு விற்பனை செய்ததாக தலைமை ஆசிரியை மஞ்சுளா விளக்கம் அளித்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டதை தொடர்ந்து, பள்ளியின் தலைமை ஆசிரியை மஞ்சுளாவை பணியிடை நீக்கம் செய்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மாணவர்களுக்கு அரசு இலவசமாக வழங்கிய பாடப்புத்தகங்களை திரும்பப் பெற்று விற்பனை செய்த சம்பவம் திருச்சி மாவட்ட கல்வித்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.