

சென்னை,
சென்னை கொளத்தூர் தொகுதி தவெக எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபுவுக்கு, கடந்த செப்டம்பர் மாதம் 9-ம் தேதி இரவு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து, அவர் சென்னை அமைந்தகரை நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் பல்துறை மருத்துவர் குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
வி.எஸ்.பாபு உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிக்கைகளை வெளியிட்டு வந்தது. இதற்கிடையில், கடந்த 10 நாட்களுக்கு மேலாக அறிக்கைகள் வெளியாகாததால், மீண்டும் வி.எஸ்.பாபுவின் உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகின்றன. இதுகுறித்து அவரது தரப்பினர் கூறுகையில், வி.எஸ்.பாபு நலமுடன் உள்ளார் என்றனர்.
இந்த நிலையில், கொளத்தூர் தவெக எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபுவின் உடல்நலம் குறித்து சட்டப்பூர்வமாக அளிக்கக் கூடிய தகவல்களை வெளியிடக் கோரி கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட செம்பியத்தைச் சேர்ந்த ஜி.தேவராஜன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அந்த மனுவில், கொளத்தூர் தொகுதி தவெக எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபு உடல்நலக் குறைவு காரணமாக கடந்த செப்டம்பர் 9-ம் தேதி முதல் அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது, உடல்நிலை குறித்து அலுவல் ரீதியான தகவல்கள் ஏதும் வெளியிப்படவில்லை. தனிப்பட்ட உரிமை, கண்ணியம், தனி நபரின் ரகசிய மருத்துவ ஆவணங்கள் ஆகியவற்றை வெளியிடும்படி கேட்கவில்லை.
சட்டப்படி அனுமதிக்கப்பட்ட தகவல்களை வெளியிடக் கோரி நவம்பர் 5 மற்றும் 12-ம் தேதிகளில் அரசுக்கு மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கொளத்தூர் தொகுதி எம்எல்ஏ வி.எஸ்.பாபுவின் உடல்நிலை குறித்து, சட்டப்படி வெளியிடக்கூடிய தகவல்களை வெளியிட உத்தரவிட வேண்டும். தொகுதி மக்களின் குறைகள், கோரிக்கைகள் இடையூறின்றி கவனிக்கப்படுவதை உறுதி செய்ய நிர்வாக ரீதியில் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.