

புதுக்கோட்டை,
நாடு முழுவதும் நாளை கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்க உள்ளன. புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போடும் பணிக்காக தயார் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாட்டை இன்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அவர் கூறியதாவது: -
தமிழ்நாட்டில் 166 இடங்கள் கொரோனா தடுப்பூசி போடுவதற்காக தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
10199 மருத்துவ முன்களப் பணியாளர்கள் அவர்களின் சுயவிருப்பத்தின் அடிப்படையில் ஒப்புதல் பெறப்பட்டு கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்குத் தான் முதல்கட்டமாக தடுப்பூசி போடப்படுகிறது. இத்துடன் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பிரபல மருத்துவ - முக்கிய பிரமுகர்களும் தடுப்பூசியைப் போட்டுக்கொள்வதற்கு அனுமதி பெறப்பட்டுள்ளது.
மருத்துவப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் சுதா சேஷய்யன், அப்போலோ மருத்துவக் குழுமத் தலைவர் பிரதாப் ரெட்டி, இந்திய மருத்துவக் கழகத்தின் அகில இந்தியத் தலைவர், மாநிலத் தலைவர் உள்பட மருத்துவப் பிரபலங்கள் தடுப்பூசி போட்டுக்கொள்கின்றனர். அனுமதி பெற்ற முன்கள பணியாளர்களுக்கு மட்டுமே தற்போது தடுப்பூசி போடப்படுகிறது மத்திய அரசு அனுமதித்தால், கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள நானும் தயார் என்றார்.