

தூத்துக்குடி,
தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டல பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் 230 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை சுகாதாரத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டல பகுதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு மற்றும் விற்பனை அதிகரித்துள்ளதாக கிடைத்த புகாரை தொடர்ந்து, சுகாதார அலுவலர் தலைமையில் சுகாதாரத் துறையினர் வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளில் தீவிர ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் போது கருத்தப்பாலம் அருகே, எட்டையபுரம் மெயின் ரோடு உள்ளிட்ட முக்கிய மொத்த விற்பனை கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த கடைகளிலிருந்து மட்டும் சுமார் 230 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் அதிரடியாகப் பறிமுதல் செய்தனர்.
மாநகராட்சி அதிகாரிகள் வடக்கு மண்டல எல்லைக்குள் இந்த வாரம் முழுவதும் நடத்திய தொடர் தீவிர ஆய்வுகளின் மூலமாக மொத்தம் 260.25 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் சுற்றுச்சூழல் விதிகளுக்கு புறம்பாக இத்தகைய தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்திய மற்றும் விற்பனை செய்த வணிகர்களுக்கு ஒட்டுமொத்தமாக ரூ.16,600 அபராதம் விதிக்கப்பட்டு உடனடியாக வசூலிக்கப்பட்டது.
மாநகராட்சி பகுதிகளில் தடை செய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களின் விற்பனையையோ அல்லது பயன்பாட்டையோ வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் முழுமையாக தவிர்க்க வேண்டும் என்றும், விதியை மீறினால் கடைகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டு கடுமையான சட்ட நடவடிக்கைகள் தொடரும் என்றும் மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.