

திருப்பூர்,
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் தாலுகா மூரார்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் குமார் (48 வயது), தொழிலாளி. இவருக்கு முதல் திருமணம் முடிந்து மனைவி பிரிந்து சென்று விட்டார். அதன் பின்னர் மற்றொரு பெண்ணை, இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். குடும்பத்தகராறு காரணமாக, 2-வது மனைவியும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு குமாரை விட்டு பிரிந்து சென்று விட்டார்.
இதனால் குமார் தனியாக வசித்து வந்ததாக தெரிகிறது. 2 மனைவிகளும் பிரிந்து சென்றதால் அவர் மனவேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, திருப்பூர் மாவட்டம் நத்தக்காடையூர் பகுதிக்கு குமார் வந்தாா். அங்கு செயல்படும் ஒரு தனியார் நிறுவனத்தில் தங்கியிருந்து கூலி வேலை செய்து வந்தார். இந்த சூழலில் 2 மனைவிகளும் பிரிந்து சென்றதால், விரக்தியில் இருந்த அவர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.
இதையடுத்து கடந்த 28-ந்தேதி இரவு வேலையை முடித்த பின்பு நிறுவனத்தை விட்டு வெளியேறிய அவர், பெட்ரோல் வாங்கிக் கொண்டு முத்தூர்-காங்கயம் சாலை, மேட்டாங்காட்டு வலசு வாய்க்கால்பாலம் பேருந்து நிறுத்தம் அருகே வந்தார். அங்கு நடுரோட்டில் பெட்ரோலை தனது உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். சிறிது நேரத்தில் தீ உடல் முழுவதும் பரவியது. வேதனை தாங்க முடியாமல் அலறினார்.
அவரது சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் தீயை அணைத்து, அவரை மீட்டு, சிகிச்சைக்காக காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர், மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.