

சென்னை,
'அமராவதி'யில் ஆரம்பித்து 'காதல் மன்னன்', 'ஆசை', 'அமர்க்களம்' என தொடர்ந்து 'குட் பேட் அக்லி' வரை 60க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித்குமார். இவர் நடிகர் மட்டுமல்லாமல் கார் பந்தயவீரரும் கூட. 'குட் பேட் அக்லி' படத்திற்கு பிறகு கார் ரேசிங்கில் அதிக கவனம் செலுத்தி வரும் இவர், ‘அஜித்குமார் ரேசிங்’ என்ற தனது சொந்த பந்தய அணியையும் தொடங்கி பல்வேறு தொடர்களில் வெற்றி பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்து வருகிறார்.
இந்த நிலையில், நடிகர் அஜித்குமார் இன்று தனது 55வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திரைப்பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள், ரசிகர்கள் என பல்வேறு தரப்பினரும் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அஜித்திற்கு வாழ்த்து தெரிவித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளா.
அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, ”தமிழ்த் திரைத்துறையின் முன்னணி நடிகரும், சிறந்த கார் பந்தய வீரருமான அன்புச் சகோதரர் பத்மபூஷன் அஜித்குமாருக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். நீண்ட ஆயுள் மற்றும் உடல்நலத்துடன் தாங்கள் தொடர்ந்து பணியாற்றிட வாழ்த்துகிறேன்” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.