

சென்னை,
பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ளன. பிளஸ்-2 பொதுத்தேர்வில் 95.20 சதவீத மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதன்படி மாணவர்கள் 93.19 சதவீதமும், மாணவிகள் 97 சதவீதமும் தேர்ச்சி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு இதயம் கனிந்த வாழ்த்துகள் என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் வெற்றி பெற்று, அடுத்த கட்டமான, கல்லூரிக் கல்வியை நோக்கி முன்னேறவுள்ள அனைத்து மாணவ மாணவியருக்கும், என் இதயம் கனிந்த வாழ்த்துகள்.
திறமைகளுக்கும், கனவுகளுக்கும் எண்ணற்ற வாய்ப்புகள் உருவாகியிருக்கும் இந்த காலத்தில், தாங்கள் விரும்பும் துறையில் கல்வி கற்று, சமுதாயத்திற்கு பயனுள்ள சாதனையாளர்களாக உயர வேண்டும் என வாழ்த்துகிறேன்.
தேர்வில் எதிர்பார்த்த முடிவை பெறாத மாணவர்கள் மனம் தளர வேண்டாம். தோல்வி என்பது முடிவு அல்ல; அது இன்னொரு முயற்சிக்கான தொடக்கம். நம்பிக்கையுடனும் கடின உழைப்புடனும் மீண்டும் முயன்று, வெற்றி பெற வாழ்த்துக்கள். ஒவ்வொரு மாணவரின் எதிர்காலமும், சிறப்பாக அமைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.