ஆதரவளித்த அனைத்து தோழமை கட்சிகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றி! - ஆதவ் அர்ஜுனா

இந்த காலத்தின் பொறுப்பில் அனைவரும் கைகோர்த்துப் பயணிப்போம் என ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
ஆதரவளித்த அனைத்து தோழமை கட்சிகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றி! - ஆதவ் அர்ஜுனா
Published on

சென்னை,

தமிழக சட்டசபையில் தவெக அரசு தனது பெரும்பான்மையை நிரூபிக்க நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று நடைபெற்றது. இதில் தீர்மானத்திற்கு ஆதரவாக 144 எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்தனர். 22 எம்.எல்.ஏ.க்கள் எதிராக வாக்களித்தனர். 5 எம்.எல்.ஏ.க்கள் நடுநிலை வகித்தனர். இதையடுத்து தீர்மானம் வெற்றி பெற்றதாக சபாநாயகர் அறிவித்தார்.

இந்த நிலையில், தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது;-

தமிழ்நாடு அரசியல் சமரசமற்ற சமத்துவ போராட்டத்திற்கு பெயர்போனது. ஒவ்வொரு காலமும் அதனை வென்றெடுக்க, தமிழக மக்கள் தங்களுக்கான சாமானியர் கையில் தங்கள் மக்களாட்சியை ஒப்படைப்பர்.

1967 ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணா வென்றடுத்தது அத்தகைய சாமானிய மக்களின் புரட்சி. 1977 ஆம் ஆண்டு புரட்சித் தலைவர் எம்ஜிஆர் வென்றது மீண்டுமொரு சரித்திரப் புரட்சி.

அத்தகைய வரலாற்றுப் பொறுப்பை அரை நூற்றாண்டுக்கு பிறகு, அவர்கள் வீட்டுப் பிள்ளையான கழகத் தலைவருக்கும், அவர் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்திற்கும் கொடுத்திருக்கிறார்கள் தமிழக மக்கள்.

தேர்தலில் மக்கள் ஆதரவுடன் தனிப்பெரும் கட்சியாக தேர்வான நாம், இன்று அனைத்து மதச்சார்பற்ற தோழமை கட்சிகளின் ஆதரவோடு சட்டப்பேரவை வாக்கெடுப்பில் வெற்றிப் பெற்றிருக்கிறோம்.

"மதச்சார்பற்ற சமூகநீதி கொள்கைகளில்" உறுதிக்கொண்டு, மக்களுக்காக பணி செய்ய வந்திருக்கும் நம்மை வாழ்த்தி ஆதரவளித்த அனைத்து தோழமை கட்சிகளுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துகொள்கிறேன்.

தமிழ்நாடு முதல்-அமைச்சர் தலைமையிலான ஆட்சி, தமிழ் நிலத்தின் உரிமையையும், அனைத்து மக்களுக்குமான நலனையும் மீட்டெடுக்கும். நம் பெருந்தலைவர்கள் காட்டிய கொள்கைப் பாதையில், எந்தவித சமரசத்திற்கும் இடமின்றி பயணிக்கும். இந்த காலத்தின் பொறுப்பில் அனைவரும் கைகோர்த்துப் பயணிப்போம். புது வரலாறு படைப்போம்!

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com