

மத்தூர்
மத்தூர் பகுதியில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்ததால் நூலகத்திற்குள் தண்ணீர் புகுந்தது.
இடி-மின்னலுடன் மழை
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு 10 மணி முதல் 12 மணி வரை இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. சூறைக்காற்றுடன் கனமழை பெய்ததால் குளிர்ச்சியான சீதோசன நிலை நிலவியது.
கனமழை மற்றும் சூறைக்காற்றின் காரணமாக மத்தூர் பஸ் நிலையம் அருகே உள்ள நூலகத்தில் அலமாரிகளில் வைக்கப்பட்டு இருந்த புத்தகங்கள் கீழே விழுந்தன. மேலும் மழைநீர் நூலகத்திற்கு உள்ளே புகுந்து முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கி நின்றதால் புத்தகங்கள் தண்ணீரில் நனைந்து சேதமானது. நூலகத்திற்குள் கழிவுநீர் புகுந்ததால் சேறும் சகதியுமாக காணப்பட்டது.
முறையாக பராமரிக்க வேண்டும்
மேலும் நூலகத்திற்கு செல்லும் வழியில் தண்ணீர் தேங்கி நின்றது. நூலகத்தை ஒட்டியுள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் சுற்றுச்சுவரில் மண் அரிப்பு ஏற்பட்டு எந்நேரமும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில் நூலகத்திற்கு அடிப்படை வசதிகள் செய்து புத்தகங்களை முறையாக பராமரிக்க வேண்டும் என்று கூறினர்.