சென்னையில் கனமழை: ஸ்கூட்டரில் வலம் வந்து அமைச்சர் என். ஆனந்த் அதிரடி ஆய்வு

சாலையில் தேங்கிய தண்ணீரை விரைவாக வெளியேற்ற அதிகாரிகளுக்கு அமைச்சர் ஆனந்த் உத்தரவிட்டார்.
சென்னையில் கனமழை: ஸ்கூட்டரில் வலம் வந்து அமைச்சர் என். ஆனந்த் அதிரடி ஆய்வு.
அமைச்சர் ஆனந்த்
Published on: 

சென்னை,

சென்னையில் பெய்து வரும் கனமழை மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் என். ஆனந்த் இன்று சென்னை தியாகராய நகர் பகுதியில் ஸ்கூட்டரில் சென்று நேரடியாக கள ஆய்வு மேற்கொண்டார்.

போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க நடவடிக்கை

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் சென்னையின் முக்கிய வணிகப் பகுதியான தி.நகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மழையின் காரணமாக சாலைகளில் நிலவும் போக்குவரத்து நெரிசலால் தனது ஆய்வோ அல்லது பொதுமக்களுக்கான பணிகளோ தொய்வடையக் கூடாது எனக் கருதிய அமைச்சர், ஆடம்பர காரைத் தவிர்த்துவிட்டு ஸ்கூட்டர் வாகனத்தை தேர்ந்தெடுத்தார்.

தி.நகர் பேருந்து நிலையத்தில் ஆய்வு

இதையடுத்து இன்று (புதன்கிழமை) தியாகராய நகர் பேருந்து நிலையம் மற்றும் அதன் உட்புறச் சாலைகளில் ஸ்கூட்டரில் வலம் வந்த தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் என். ஆனந்த், தேங்கியுள்ள வெள்ள நீரையும், நிவாரணப் பணிகளையும் பார்வையிட்டார். தண்ணீரை விரைவாக வெளியேற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் அவர், அங்கிருந்த பொதுமக்களை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார். அமைச்சரின் இந்த எளிய மற்றும் அதிரடியான பைக் ஆய்வு குறித்த வீடியோக்களும் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன.

X

Daily Thanthi
www.dailythanthi.com