தஞ்சையில் கனமழையால் நெற்பயிர்கள் சேதம்: விவசாயிகள் கவலை


தஞ்சையில் கனமழையால் நெற்பயிர்கள் சேதம்: விவசாயிகள் கவலை
x
தினத்தந்தி 20 Jan 2025 3:53 AM IST (Updated: 20 Jan 2025 8:23 AM IST)
t-max-icont-min-icon

அறுவடைக்கு தயாரான சம்பா நெற்பயிர்கள் சாய்ந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மதியத்திற்கு பிறகு மழை விட்டு, விட்டு பெய்தது. இரவு முதல் நேற்று அதிகாலை வரை விடிய, விடிய பரவலாக மழை பெய்தது. இதனால் கும்பகோணம், திருப்பனந்தாள், பாபநாசம் மற்றும் சித்திரக்குடி, கல்விராயன்பேட்டை, சீராளூர், 8-நம்பர் கரம்பை, வண்ணாரப்பேட்டை பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சாய்ந்தன. தொடர்ந்து மழை பெய்தால் நெற்பயிர்கள் கடுமையாக பாதிக்கும். இதனால் மகசூல் பாதிக்கும் என விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

இது குறித்து விவசாயிகள் கூறும்போது, 'சம்பா பயிர்கள் நன்கு செழித்து வளர்ந்த நிலையில் கடந்த மாதம் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்டது. அதில் இருந்து மீண்டு வந்த நிலையில் நெற்பயிர்களில் நெல் பழம் நோய் தாக்குதல் தென்பட்டது. இன்னும் 2 வாரத்தில் அறுவடை செய்து விடலாம். அதிக பாதிப்பு இருக்காது என்று நினைத்து இருந்தோம். ஆனால் தற்போது பெய்த மழையில் பாதிக்கு பாதி நெல்பயிர்கள் வயலில் சாய்ந்து கிடக்கிறது. இப்போது அறுவடையும் செய்ய முடியாது. எனவே அதிகாரிகள் இப்பகுதிகளை மீண்டும் ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும்' என்றனர்.

காவிரி டெல்டா மாவட்டங்களில் ஒன்றான மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் இரவு 7 மணி அளவில் கனமழை பெய்ய தொடங்கியது. இந்த மழை விடிய, விடிய பெய்தது. நேற்று பகலில் விட்டு விட்டு மழை பெய்தது. இரவு முழுவதும் கொட்டித்தீர்த்த கனமழை காரணமாக மயிலாடுதுறை, தரங்கம்பாடி தாலுகா பகுதிகளில் நெற்பயிர்கள் வயலிலேயே சாய்ந்து சேதம் அடைந்து காணப்படுகின்றன.

மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இன்று (திங்கட்கிழமை) அறுவடை பணிகளை தொடங்க விவசாயிகள் தயார் நிலையில் இருந்தனர். இதற்கிடையே, சீர்காழி, திருவெண்காடு, பூம்புகார் உள்ளிட்ட இடங்களில் விடிய விடிய கனமழை பெய்ததால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சேதம் அடைந்தன. குத்தாலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான சேத்திரபாலபுரம், அசிக்காடு, பெரம்பூர், பாலையூர், கோமல், ஆலங்குடி, மாதிரிமங்கலம், திருவாவடுதுறை, திருவாலங்காடு, ஆனைமேலகரம், மல்லியம் உள்ளிட்ட இடங்களில் நேற்று முன்தினம் இரவு முழுவதும் பெய்த கனமழையால் அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா நெற்பயிர்கள் சேதம் அடைந்தன.

1 More update

Next Story