மேற்கு தொடர்ச்சி மலைகளில் கனமழை: 100 அடியை நெருங்கும் பாபநாசம் அணை நீர்மட்டம்

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வந்த நிலையில் நேற்று பிற்பகலுக்கு பின்னர் சற்று குறைந்துள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைகளில் கனமழை: 100 அடியை நெருங்கும் பாபநாசம் அணை நீர்மட்டம்
Published on

நெல்லை

நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை அணைகள் நீர்பிடிப்பு பகுதிகளில் 1 வாரமாக கொட்டித்தீர்த்த கனமழையால் நீர் இருப்பு வேகமாக உயர்ந்து வருகிறது. இந்நிலையில் நேற்று மாலையில் இருந்து மலைப்பகுதிகளில் மழை குறைய தொடங்கி உள்ளது.மாவட்டத்தின் பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 4 ஆயிரத்து 137 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அந்த அணையில் இருந்து பாசனத்திற்காக 504 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணை நீர்மட்டம் இன்று ஒரே நாளில் 6 அடி உயர்ந்து 96.20 அடியை எட்டியுள்ளது. விரைவில் 100 அடியை நெருங்க உள்ளது.சேர்வலாறு அணை நீர்மட்டம் 115 அடியாக இருந்த நிலையில் இன்று மேலும் 3 அடி உயர்ந்து 118.34 அடியை எட்டியுள்ளது. 118 அடி கொண்ட மணிமுத்தாறு அணை நீர்இருப்பு இன்று 1 அடி உயர்ந்து 74¾ அடியாக உள்ளது. பாபநாசத்தில் 8 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள மாஞ்சோலை எஸ்டேட்டுகளில் நேற்று மழை சற்று குறைந்தது. எனினும் மணிமுத்தாறு அருவிக்கு நீர் வரத்து குறையாமல் வெள்ளப்பெருக்கு நீடித்து வருவதால் இன்றும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 1 வாரத்துக்கும் மேலாக அங்கு தடை நீடிப்பதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நாலுமுக்கு எஸ்டேட் பகுதியில் அதிகபட்சமாக 7 சென்டிமீட்டர் மழை பெய்தது. ஊத்து எஸ்டேட்டில் 6 சென்டிமீட்டரும், காக்காச்சியில் 5 சென்டிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது.

தென்காசி

தென்காசி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் இன்று அதிகாலை முதலே மழை குறைந்தது. மாவட்டத்தின் மிகச்சிறிய அணையான குண்டாறு அணை தனது முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழியும் நிலையில், கடையம் ராமநதி மற்றும் கடனா அணைகள் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

85 அடி கொள்ளளவு கொண்ட கடனா அணை நீர்மட்டம் இன்று 2½ அடி உயர்ந்து 59 அடியை நெருங்கி உள்ளது. அந்த அணைக்கு வினாடிக்கு 152 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 84 அடி கொண்ட ராமநதி அணையில் 2 அடி நீர்மட்டம் உயர்ந்து 62½ அடியாகி உள்ளது.அடவிநயினார் அணை நீர்மட்டம் 2½ அடி உயர்ந்து 75 அடியை எட்டியுள்ளது. இதனால் அணையை ஒட்டிய மேக்கரை, பண்பொழி சுற்றுவட்டார பகுதிகளில் விவசாய பணிகள் தீவிரம் அடைந்துள்ளது. தொடர்மழையால் மாவட்டம் முழுவதும் விவசாய பணிகளை விவசாயிகள் மகிழ்ச்சியுடன் செய்து வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com