

நெல்லை,
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில், நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சில இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
மாஞ்சோலை தேயிலை தோட்டம், பாபநாசம் அணை, சேர்வலாறு அணை அமைந்திருக்கும் மலையில் உள்பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது.
7 அடி உயர்ந்த பாபநாசம் அணை
இதனால் பாபநாசம், மணிமுத்தாறு அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. பாபநாசம் அணைக்கு நேற்று காலை நிலவரப்படி வினாடிக்கு 4 ஆயிரத்து 694 கனஅடி வீதம் தண்ணீர் வந்தது. 143 அடி உயரம் கொண்ட இந்த அணையின் நீர்மட்டம் நேற்று முன்தினம் 68 அடியாக இருந்த நிலையில், ஒரே நாளில் 7 அடிக்கு மேல் உயர்ந்து நேற்று காலை 75.40 அடியாக இருந்தது. அணையில் இருந்து பாசனத்துக்கு திறக்கப்பட்ட தண்ணீரின் அளவு வினாடிக்கு 405 கன அடியாக அதிகரிக் கப்பட்டு உள்ளது.
156 அடி உயரம் கொண்ட சேர்வலாறு அணை நீர்மட்டம் 89 அடியில் இருந்து மேலும் 6 அடி உயர்ந்து 95 அடியாக உள்ளது.
மணிமுத்தாறு அணை
118 அடி கொண்ட மணிமுத்தாறு அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதி ரித்து உள்ளது. இதனால் அணையின் உள்பகுதியில் அமைந்திருக்கும் மணிமுத்தாறு அருவியில் தொடர்ந்து குளிக்க தடை விதிக்கப்பட்டு உள் ளது. இந்த அணை நீர்மட்டம் சற்று உயர்ந்து 69.42 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து 810 கன அடியாக அதிகரித்து உள்ளது. அதே நேரத்தில் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரின் அளவு 195 கன அடியாக குறைக்கப்பட்டு உள்ளது.
தென்காசி மாவட்டத்தில் உள்ள கடனாநதி அணை நீர்மட்டம் 5 அடி உயர்ந்து 43 அடியாகவும், ராமநதி அணை நீர்மட்டம் 5 அடி உயர்ந்து 47 அடியாகவும், கருப்பாநதி அணை நீர்மட்டம் 2 அடி உயர்ந்து 44 அடியாக வும், குண்டாறு அணை நீர்மட்டம் 2 அடி உயர்ந்து 30 அடியாகவும், அட விநயினார் அணை நீர்மட்டம் 4 அடி உயர்ந்து 60 அடியாகவும் உள்ளது.
இந்த அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதில் குண்டாறு அணை ஓரிரு நாட்களில் நிரம்பும் தருவாயில் உள்ளது.