

கோவை,
கோவையில் 3 மணி நேரத்திற்கும் மேலாக கொட்டித் தீர்த்த கனமழையால் சாலைகளில் ஆறு போல தண்ணீர் செல்வதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.
வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரமடைந்துள்ள நிலையில், கோவை மாவட்டத்திற்கு அதி கனமழைக்கான வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
இந்த நிலையில், கோவை மாநகரில் பல்வேறு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் முதல் பெய்து வரும் தொடர் கனமழையால் பல்வேறு பகுதிகளில் மக்கள் கடும் இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர்.
கோவை மாநகரில் 3 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டி தீர்த்த நிலையில், அரசு மருத்துவமனைக்குள் மழைநீர் புகுந்தது. இதனால் நோயாளிகள், பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். தண்ணீரை வெளியேற்றும் நடவடிக்கைகளில் மாநகராட்சி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.
கோவையில், பல்வேறு பகுதிகளில் பரவலாக பெய்த கனமழையால் சுரங்கப்பாதைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்ததால், பேருந்து மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
தற்போது மாநகரின் பல்வேறு பகுதிகளில் சாலைகள் மிகவும் பழுதடைந்த நிலையில் இருப்பதால், மழை நீர் ஆறு போல ஓடுவதால் பள்ளத்தில் நீர் தேங்கி இருசக்கர வாகனங்கள் ஆங்காங்கே விபத்துக்குள்ளாகி வருகின்றது. எனினும் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் மாநகர் முழுவதும் வெப்பம் தணிந்து மிகவும் குளிர்ச்சியான சூழல் நிலவுகின்றது.
இன்று தமிழகத்திலேயே அதிகபட்சமாக கோவை TNAU வேளாண் ஆராய்ச்சி மையப் பகுதியில் 7.15 செ.மீ மழை பதிவு
விஜயநகரம் (நீலகிரி) 5.95 .
குன்னூர் மற்றும் புதுச்சேரி - 4.7 செ.மீ கொடைக்கானல் 4.24 .
எண்ணூர் துறைமுகப் பகுதி(சென்னை) - 2 செ.மீ
மாதவரம் - 1.15 .