நீலகிரி மலைப்பகுதியில் கன மழை எதிரொலி: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 18,611 கன அடியாக அதிகரிப்பு;நீர்மட்டம் 91 அடியை தாண்டியது

நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கன மழை பெய்வதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 18 ஆயிரத்து 611 கன அடியாக அதிகரித்தது. இதனால் அணையின் நீர்மட்டம் 91 அடியை தாண்டியது.
நீலகிரி மலைப்பகுதியில் கன மழை எதிரொலி: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 18,611 கன அடியாக அதிகரிப்பு;நீர்மட்டம் 91 அடியை தாண்டியது
Published on

பவானிசாகர்

நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கன மழை பெய்வதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 18 ஆயிரத்து 611 கன அடியாக அதிகரித்தது. இதனால் அணையின் நீர்மட்டம் 91 அடியை தாண்டியது.

பவானிசாகர் அணை

தென்னிந்தியாவின் மிகப் பெரிய மண் அணை என்ற பெருமையும், தமிழகத்தின் 2-வது பெரிய அணை என்ற பெருமையும் கொண்டது பவானிசாகர் அணை. இந்த அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 105 அடியாக கணக்கிடப்படுகிறது. நீலகிரி மலைப்பகுதியில் இருந்து வரும் பவானி ஆறும், கூடலூர் மலைப்பகுதியில் இருந்து வரும் மோயாறும் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து ஆதாரங்களாக விளங்குகிறது. பவானிசாகர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரால் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களை சேர்ந்த சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும் ஈரோடு மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் பவானிசாகர் அணை விளங்குகிறது.

நீர்வரத்து அதிகரிப்பு

பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் குறிப்பாக அவலாஞ்சி, மேல்பவானி, கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதாலும், கோவை மாவட்டம் பில்லூர் அணை நிரம்பி அதில் இருந்து உபரி தண்ணீர் திறப்பதாலும் பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 7 ஆயிரத்து 223 கன அடியாக இருந்தது. அப்போது அணையின் நீர்மட்டம் 89.77 அடியாக இருந்தது. அணையில் இருந்து பவானி ஆற்றில் குடிநீருக்காக வினாடிக்கு 100 கன அடியும், பாசனத்துக்காக வினாடிக்கு 900 கன அடியும், கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 5 கன அடியும் தண்ணீர் திறக்கப்பட்டது.

91 அடியை தாண்டியது

நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 18 ஆயிரத்து 611 கன அடியாக அதிகரித்தது. அப்போது அணையின் நீர்மட்டம் 91.49 அடியாக உயர்ந்தது. ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 1.72 அடி உயர்ந்து உள்ளது. பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதாலும், நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதாலும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com