கஞ்சா வியாபாரிகளை காப்பாற்றிய கனமழை - ஆதாரம் இல்லாததால் நீதிமன்றம் விடுவித்தது

போலீசார் பறிமுதல் செய்த கஞ்சா மழைநீரில் அடித்து செல்லப்பட்டதால் கஞ்சா வழக்கில் கைதான 2 பேரை கோர்ட்டு விடுவித்தது.
கஞ்சா வியாபாரிகளை காப்பாற்றிய கனமழை - ஆதாரம் இல்லாததால் நீதிமன்றம் விடுவித்தது
Published on

சென்னை,

கடந்த 2007-ம் ஆண்டு சென்னை வால்டாக்ஸ் சாலை சந்திப்பு ஜட்காபுரம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கல்யாணபுரம் பள்ளம் பகுதியைச்சேர்ந்த முத்து (வயது 40), அம்பத்தூர் பகுதியைச்சேர்ந்த ராஜீ (43) ஆகியோரை யானைக்கவுனி போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து 3 கிலோ 300 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இந்த கஞ்சாவை போலீசார் கோர்ட்டில் சமர்ப்பித்தனர்.

அப்போது பறிமுதல் செய்த கஞ்சாவை போலீஸ்நிலையத்தில் பாதுகாப்பாக வைக்கவேண்டும் என்றும், விசாரணைக்கு தேவைப்படும் போது கஞ்சாவை ஒப்படைக்கவேண்டும் என்றும் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.

அதன்படி பறிமுதல் செய்த கஞ்சாவை போலீசார் யானைக்கவுனி போலீஸ்நிலையத்தில் பாதுகாப்பாக வைத்திருந்தனர்.

இந்தநிலையில் அந்த வழக்கு சென்னை போதைப்பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு சிறப்பு கோர்ட்டில் நீதிபதி ஜூலியட் புஷ்பா முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை கோர்ட்டில் ஒப்படைக்க போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

அதன்படி கோர்ட்டில் ஆஜரான போலீஸ் அதிகாரி, '2015-ம் ஆண்டு ஏற்பட்ட கனமழையால் கஞ்சா சேதமடைந்து நீரில் அடித்து செல்லப்பட்டதாக தெரிவித்தார்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் ஆஜரான வக்கீல், 'கைதானவர்களிடம் இருந்து பறிமுதல் செய்ததாகக் கூறப்படும் கஞ்சாவை போலீசார் கோர்ட்டில் ஒப்படைக்கத் தவறி விட்டனர். அப்படி இருக்கும்போது கைதானவர்கள் கஞ்சா வைத்திருந்ததாகக் கூறுவது ஏற்புடையது அல்ல. எனவே, கைதானவர்களை விடுவிக்கவேண்டும்' என்றார்.

வழக்கை விசாரித்த நீதிபதி, கைதானவர்கள் மீதான குற்றச்சாட்டை போலீசார் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கவில்லை எனக்கூறி முத்து, ராஜீ ஆகிய இருவரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார்.

ஏற்கனவே சென்னையில் உள்ள 2 போலீஸ்நிலையங்களில் இருந்த கஞ்சாவை எலிகள் தின்று விட்டதாகக்கூறி அந்த போலீஸ்நிலையங்களில் பதிவு செய்த கஞ்சா வழக்கில் கைதானவர்களை கோர்ட்டு விடுதலை செய்தது.

தற்போது கனமழையால் கஞ்சா நீரில் அடித்து செல்லப்பட்டதாகக் கூறி 2 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com