

சென்னை,
சென்னையின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முழுவதும் கனமழை கொட்டித் தீர்த்தது. மேலும், வானிலை மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரக்கோணத்தில் இருந்து சென்னைக்கு தேசிய பேரிடர் மீட்புக் குழு வரவழைக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக வேளச்சேரிக்கு 30 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் சென்னை உள்பட 17 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதால், தேசிய பேரிடர் மீட்பு படையினர் சம்பந்தப்பட்ட மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர். சென்னையை பொறுத்தவரை ஒவ்வொரு பருவமழையின் போதும் வெள்ளத்தால் பாதிக்கக்கூடிய பகுதிகளில் ஒன்றான வேளச்சேரிக்கு மீட்புப் படையினர் வந்துள்ளனர்.
மீட்புப் பணிகளுக்கு தேவையான ரப்பர் படகுகள், உயிர் காக்கும் உடைமைகள், இடர்பாடுகளை அகற்றுவதற்கு பயன்படுத்தப்படும் ஹைட்ராலிக் கட்டர்கள், முதலுதவிப் பெட்டிகள், மரம் அறுக்கும் இயந்திரங்கள், கூடாரங்கள், ஸ்டெரச்சர்கள், தீயணைப்புக் கருவிகள் உள்ளிட்ட பல்வேறு நவீன உபகரணங்களுடன் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
தற்போது வேளச்சேரியில் உள்ள சமுதாய நலக்கூடத்தில மீட்புப் படையினர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வேளச்சேரி மட்டுமின்றி, பள்ளிக்கரணை, மடிப்பாக்கம் உள்பட வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடிய மற்ற இடங்களிலும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மீட்புப் பணிகளில் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.