புதுச்சேரியில் இடி, மின்னலுடன் பலத்த மழை

புதுச்சேரியில் இடி, மின்னலுடன் பெய்த பலத்த மழை பொதுமக்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
புதுச்சேரியில் இடி, மின்னலுடன் பலத்த மழை
Published on

புதுச்சேரி,

புதுச்சேரியில் இடி, மின்னலுடன் பெய்த பலத்த மழை பொதுமக்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

அதிகாலையில் மழை

வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக புதுச்சேரி, தமிழகத்தில் ஒரு சில இடங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.

இந்தநிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட தமிழக மாவட்டங்களிலும், புதுச் சேரியிலும் இடி, மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரித்து இருந்தது.

அதன்படி நேற்று முன்தினம் முழுவதும் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. ஆனால் மழை பெய்யாமல் ஏமாற்றியது. அதிகாலை சுமார் 6 மணி யளவில் புதுச்சேரியில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

சாலையில் வெள்ளம்

சுமார் ஒரு மணி நேரம் இடைவிடாமல் மழை இடி, மின்னலுடன் கொட்டித்தீர்த்தது. அதன்பிறகு பகல் 11.30 மணி வரை லேசாக தூறல் விழுந்தபடி இருந்தது. இதனால் புஸ்சி வீதி, கிழக்கு கடற்கரை சாலை, திருவள்ளுவர் சாலை, பாவாணர் நகர், ரெயின்போநகர், முதலியார்பேட்டை, முத்தியால்பேட்டை உள்ளிட்ட இடங்களில் மழைநீர் பெருக் கெடுத்து ஓடியது. மேலும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றது.

சாலையோரம் இருந்த பெரும்பாலான மரங்களில் இருந்து கிளைகள் முறிந்து விழுந்தன. சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் ஓடியதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பெரிதும் அவதி அடைந்தனர்.

சுற்றுலா வந்த பயணிகள் வெளியே வராமல் விடுதி அறைகளிலேயே முடங்கினர். மழை விட்ட பிறகு அவர்கள் கடற்கரை உள்ளிட்ட சுற்றுலா இடங்களுக்கு புறப்பட்டுச் சென்றனர்.

5.4 செ.மீ. பதிவு

கடந்த சில வாரங்களாக சுட்டெரித்து வந்த வெயில் கோடைக்காலத்தில் இருந்ததை விட கொடூரமாக இருந்தது. இந்தநிலையில் நேற்று பெய்த மழை புதுவையை குளிர்விக்கச் செய்தது.

நேற்று காலை முதல் பகல் 11 மணி வரை 5.4 செ.மீ. மழை பதிவானது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com