28 முதல் 30ம் தேதி வரை கனமழை: கலெக்டர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க தமிழக அரசு அறிவுறுத்தல்

குமரிக்கடல் மற்றும் இலங்கைக்கு தெற்கே நிலவும் காற்றழுத்த தாழ்வு காரணமாக தமிழ்நாட்டின் டெல்டா மற்றும் கடலோர மாவட்டங்களில் 28 முதல் 30ம் தேதி வரை கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.
28 முதல் 30ம் தேதி வரை கனமழை: கலெக்டர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க தமிழக அரசு அறிவுறுத்தல்
Published on

24.11.25 அன்று குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று 25.11.25, இலங்கைக்கு தெற்கே வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகி உள்ளது. இந்த தாழ்வுப்பகுதி மேலும் வலுவடைந்து தமிழ்நாட்டின் கடலோரமாக வடக்கு நோக்கி நகரக் கூடும் என்பதால் டெல்டா மாவட்டங்கள், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் வரும் 28.11.25 முதல் 30.11.25 வரை கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும். எனவே தமிழ்நாடு அரசு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர்களை அறிவுறுத்தியுள்ளது.

மேலும் தமிழக வருவாய் நிர்வாக ஆணையர் மற்றும் மாநில நிவாரண ஆணையர் முனைவர் எம்.சாய்குமார் இன்று (25.11.2025) சென்னை எழிலகத்தில் உள்ள ஒருங்கிணைந்த வெள்ள மேலாண்மை மையத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர்களுடன் பேரிடரை எதிர்கொள்ள மேற்கொண்டுள்ள முன்னெச்சரிக்கைகள் மற்றும் ஆயத்தநிலை குறித்து ஆய்வு செய்தார். அப்பேது அவர், நிவாரண மையங்களை தயார் நிலையில் வைத்துகொள்ளுமாறும், நேரடி கொள்முதல் மையங்களின் இருந்து அனைத்து நெல் மூட்டைகளையும் பாதுகாப்பாக நகர்வு செய்யுமாறும், கூடுதல் மின்கம்பங்கள், மின்வடங்கள் தயார் நிலையில் வைக்குமாறும், மீட்புப் படையினருடன் தயார் நிலை குறித்து ஆய்வு செய்யுமாறும் அறிவுரை வழங்கினார். இந்த ஆய்வின்போது பேரிடர் மேலாண்மைத் துறை ஆணையர் சிஜி தாமஸ் வைத்தியன், பேரிடர் மேலாண்மைத் துறை இயக்குநர் முத்துக்குமரன் மற்றும் வருவாய் பேரிடர் மேலாண்மைத் துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

வடகிழக்கு பருவ மழையினை எதிக்கொள்ள, தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையின் மூன்று அணியினர் நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கன்னியிலும், இரண்டு அணியினர் கடலூர் மாவட்டம் கடலூர் நகராட்சிக்கு அருகிலும் மீட்பு மற்றும் நிவாரண பணிக்காக முன்னெச்சரிக்கையாக நிலை நிறுத்தப்பட்டுள்னனர். மேலும் தேசிய பேரிடர் மீட்பு படையின் ஒரு அணி 26-11-2025 முதல் விழுப்புரம் மாவட்டத்தில் நிலைநிறுத்தப்பட உள்ளது.

கனமழை எச்சரிக்கை வரப்பெற்றுள்ளதால் மாநில அவசர கால செயல்பாட்டு மையம் மற்றும் மாவட்ட அவசர கால செயல்பாட்டு மையம் மூலம் நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com