

சென்னை,
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில், தமிழக கடற்கரையை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 5 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதன்படி, சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் இன்று கனமழை பெய்யும். மற்ற மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் மிதமான மழை பெய்யும்.
தென்மேற்கு, மத்திய மேற்கு மற்றும் வடக்கு அரபிக்கடல் பகுதிகளில், வரும் 27ந்தேதி வரை மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும். எனவே, மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதேபோன்று, 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் நீலகிரி, கோவை, கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், உள்மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழையும் பெய்ய கூடும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.