காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 4 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 4 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.
ஒகேனக்கல்
Published on

தர்மபுரி,

கனமழை

கர்நாடகா மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. இதனால் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது. இந்த நிலையில் தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளான ஓசூர், கனகபுரா, தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, நாட்றாம்பாளையம், கேரட்டி, ராசி மணல், பிலிகுண்டுலு, ஒகேனக்கல் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.

நீர்வரத்து அதிகரிப்பு

இதன் காரணமாக நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. இந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 4 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இதனால் காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

தீவிர கண்காணிப்பு

மேலும் ஒகேனக்கல் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் செந்நிறத்தில் ஆர்ப்பரித்து கொட்டியது. இந்த நீர்வரத்தை காவிரி நுழைவிடமான தமிழக-கர்நாடக மாநில எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இதனிடையே நேற்று ஒகேனக்கல்லுக்கு வந்த சுற்றுலா பயணிகள் அருவிகள் மற்றும் காவிரி ஆற்றில் குளித்தனர். பின்னர் அவர்கள் உற்சாகமாக பாறைகளுக்கு இடையே பரிசல் சவாரி செய்து மகிழ்ந்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com