

மயிலாடுதுறை,
டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் நேற்று முன்தினம் மழை கொட்டி தீர்த்தது. சீர்காழி பகுதியில் கடந்த மூன்று நாட்களாக பெய்த தொடர் மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா நெற்பயிர்கள் மழை நீரில் சாய்ந்து மூழ்கி வீணாகி வருகிறது.
இதேபோல் கதிர் வரும் நிலையில் உள்ள சம்பா நெற்பயிர்களும் பல்வேறு இடங்களில் மழைநீரில் சாய்ந்தன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்த கன மழையால் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளன.
நாகை மாவட்டம்
நாகை மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றிய பகுதிகளில் ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் சாய்ந்ததால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் செலவு செய்து அறுவடை நேரத்தில் பயிர்கள் சாய்ந்து விட்டதால் பெரும் நஷ்டம் ஏற்படும். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாதிக்கப்பட்ட வயல்களை பார்வையிட்டு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கனமழையால் நாகை மாவட்டத்தில் 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது.
தஞ்சை, புதுக்கோட்டை
தஞ்சை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதனால் அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா நெற்பயிர்கள் சாய்ந்தன. மேலும் நிலக்கடலை சாகுபடி செய்த வயல்களிலும் தண்ணீர் தேங்கியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். பேராவூரணியில் அதிக பட்சமாக 22 செ.மீ மழை பெய்தது:
பட்டுக்கோட்டை அருகே பெய்த பலத்த மழையால் வீடு இடிந்து விழுந்து சின்னக்கண்ணு (வயது 70) என்ற மீனவர் உயிரிழந்தார். அவரது மனைவி படுகாயத்துடன் உயிர் தப்பினார்.
புதுக்கோட்டையில் தொடர் மழையின் காரணமாக 200 ஏக்டேர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதில் 2 ஏக்கர் நிலத்தில் இருந்த கரும்புகள் சாய்ந்து நாசம் அடைந்தன.
கோவிலுக்குள் புகுந்த மழைநீர்
ராமேசுவரம் பகுதியிலும் நேற்று முன்தினம் தொடங்கி நேற்று காலை வரை மழை வெளுத்து வாங்கியது. இதனால் ராமநாதசாமி கோவிலுக்குள் மழைநீர் புகுந்தது.
குறிப்பாக சாமி சன்னதி பிரகாரத்தில் தேங்கி நின்ற மழைநீரில் நின்றபடி பக்தர்கள் தரிசனம் செய்தனர். திண்டுக்கல்லில் விடிய, விடிய கொட்டித்தீர்த்த கனமழையால் சாலைகளில் மழைநீர் கரைபுரண்டு ஓடியது.