

திருவனந்தபுரம்,
நிரபுத்ரி விழாவிற்காக சபரிமலைக்கு வர திட்டமிட்டுள்ள அய்யப்ப பக்தர்கள் தங்கள் பயணம் குறித்து மறுபரிசீலனை செய்து முடிவெடுக்க வேண்டும் என திருவிதாங்கூர் தேவசம்போர்டு கேட்டுக் கொண்டுள்ளது.
கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் அடுத்த சில தினங்களுக்கு கேரளாவில் தொடர்ந்து கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இந்த நிலையில், பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஆகஸ்ட் 3-ந்தேதி நிரபுத்ரி விழா நடைபெற உள்ளது. இந்த நிரபுத்ரி விழாவின்போது விவசாயம் செழிக்கவும், மழை பெய்யவும் வேண்டி, அறுவடை செய்த நெல்லை அய்யப்பனுக்கு படைத்து சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். இதற்காக கேரளா முழுவதும் இருந்து புதிதாக அறுவடை செய்த நெற்கதிர்கள் கொண்டு வரப்பட்டு பூஜைகள் நடைபெறும்.
இந்த பூஜையில் கலந்து கொள்வதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வருகை தந்து, அய்யப்பனை தரிசனம் செய்வார்கள். அதோடு, நிரபுத்ரி பூஜை முடிந்த பிறகு அய்யப்ப பக்தர்களுக்கு நெற்கதிர்கள் வழங்கப்படும். அந்த நெற்கதிர்களை பெறக்கூடிய அய்யப்ப பக்தர்களின் குடும்பம் ஆரோக்கியமாகவும், செழிப்போடும் இருக்கும் என்பது நம்பிக்கையாகும்.
இந்த சூழலில், பம்பை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே சபரிமலைக்கு செல்லக்கூடிய பாதைகளில் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால், நிரபுத்ரி விழாவிற்காக சபரிமலைக்கு வர திட்டமிட்டுள்ள அய்யப்ப பக்தர்கள் தங்கள் பயணம் குறித்து மறுபரிசீலனை செய்து முடிவெடுக்க வேண்டும் என திருவிதாங்கூர் தேவசம்போர்டு கேட்டுக் கொண்டுள்ளது. தற்போதைய சூழலில் பயணம் மேற்கொள்வது ஆபத்தானது என்றும், பாதுகாப்பு எச்சரிக்கையை கருத்தில் கொண்டு அய்யப்ப பக்தர்கள் முடிவெடுக்க வேண்டும் எனவும் தேவசம்போர்டு அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.