நீலகிரியில் கனமழை: பஸ் மீது மண்ணுடன் மரம் சரிந்து விழுந்து பாதிப்பு

சம்பவம் நடந்த இடத்தில் செல்போன் சிக்னல் இல்லாததால் மீட்பு பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
நீலகிரியில் கனமழை: பஸ் மீது மண்ணுடன் மரம் சரிந்து விழுந்து பாதிப்பு
Published on: 

உதகை,

நீலகிரியில் கனமழையால் பயணிகளுடன் சென்ற அரசு பஸ் மீது மண்ணுடன் மரம் சரிந்து விழுந்தது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், நீலகிரியில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று இரவு பெய்த கன மழையால் ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் குன்னூர் மற்றும் கோத்தகிரி சாலையில் சுமார் 20 இடங்களில் மண் மற்றும் மரங்கள் விழுந்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கீழ் கோத்தகிரியில் அதிகபட்சமாக 200 மில்லி மீட்டரும், பரலியாரில் அதிகபட்சமாக 250 மில்லி மீட்டரும் மழை பதிவாகியுள்ளது.

பஸ்மீது மண்சரிந்து பாதிப்பு

குன்னூர் மற்றும் மேட்டுப்பாளையம் இடையே கோவை மாவட்ட எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சுமார் 5 பயணிகளுடன் இருந்த பஸ் மீது மரம் மற்றும் மண் விழுந்து பாதிப்பு ஏற்பட்டது. கண்டக்டர் மீட்கப்பட்டு, சுயநினைவு இல்லாத நிலையில் சிகிச்சைக்காக கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளார். டிரைவர் நிலை என்ன என்று தெரியவில்லை. சம்பவ இடத்தில் தீயணைப்புத் துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். விசாரணைக்காக போக்குவரத்து துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று கொண்டுள்ளனர். சம்பவம் நடந்த இடத்தில் செல்போன் சிக்னல் இல்லாததால் மீட்பு பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மழை பாதிப்பால் நேற்று இரவு 12 மணி முதல் காலை 9 மணி வரை ஊட்டி - குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் முழுவதும் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

போக்குவரத்து நிறுத்தம்

இதேபோல் ஊட்டி -கோத்தகிரி- மேட்டுப்பாளையம் சாலையில் காலை 5 மணி அளவில் ஒரு மணி நேரம் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது சாலையின் ஒருபுறம் மட்டும்ம் சிறிய வாகனங்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறது. இதேபோல் ஊட்டிக்கு செல்லும் மாற்றுப் பாதையான காரமடையில் இருந்து கெத்தை மஞ்சூர் வழியாக செல்லும் சாலையிலும் பாறைகள் விழுந்துள்ளதால் அங்கும் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக (இன்று சனிக்கிழமை) நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஆறு தாலுகாக்களுக்கும் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து கலெக்டர் லட்சுமி பவ்யா உத்தரவிட்டுள்ளார்.

மலை ரெயில் ரத்து

இந்தச் சூழலில், பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உதகை - மேட்டுப்பாளையம் மலை ரெயில் சேவை இன்று ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மலை ரெயிலில் பயணம் செய்யத் திட்டமிட்டிருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். மழை பாதிப்புகள் காரணமாகப் பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

X

Follow us on Google
Daily Thanthi
www.dailythanthi.com