குமரி மாவட்டத்தில் மலையோரம்-நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை -விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி

குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது.
 குமரி மாவட்டத்தில்   மலையோரம்-நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை -விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி
Published on

குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது. இதன் காரணமாக இரவில் வீடுகளில் தூங்க முடியாமல் மக்கள் அவதிப்பட்டனர். இதுபோல், சித்திரை மாதம் தொடங்க வேண்டிய கன்னிப் பூ சாகுபடி பணிகளை தொடங்க முடியாமல் விவசாயிகளும் தவித்து வந்தனர்.கடுமையான வெப்பம் காரணமாக, மாவட்டத்தில் உள்ள அணைகள் போதிய நீரின்றி வறண்டு காணப்பட்டன. இதனால், விதை விதைத்து அறுவடை காலம் வரை தண்ணீர் கிடைக்குமா? என்ற சந்தேகத்தில் விவசாயிகள் பணிகளை தொடங்காமல் இருந்து வருகின்றனர். கோடைமழை அவ்வப்போது மலையோர பகுதிகளில் பெய்தாலும், அவை எதற்கும் பயன்படாமல் உள்ளது.

அக்னி நட்சத்திரம் கடந்த 4-ந் தேதி தொடங்கிய நிலையில், வெப்பத்தின் அளவு அதிகரித்து காணப்பட்டது. இந்த சூழலில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்திருந்தது. அதன்படி, குமரி மாவட்டத்தில் மழை பெய்தது. நேற்று காலையில் வெயில் அடித்து வந்த நிலையில், மாலையில் சீதோஷ்ண நிலை மாறியது. வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது.

நேரம் செல்லச் செல்ல, மாவட்டத்தின் பல பகுதிகளிலும் மழை பெய்யத் தொடங்கியது. நகர் பகுதிகளில் மழை இல்லாத நிலையில், மலையோர மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மிதமான மற்றும் கனமழை பெய்தது. பெருஞ்சாணி அணை பகுதியில் 71.4 மில்லி மீட்டரும், புத்தன் அணை பகுதியில் 64.8 மில்லி மீட்டரும், திற்பரப்பு பகுதியில் 54.4 மில்லி மீட்டரும் மழை பெய்தது.

இந்த மழை காரணமாக, பேச்சிப்பாறை அணைக்கு விநாடிக்கு 101 கன அடியும், பெருஞ்சாணி அணைக்கு விநாடிக்கு 151 கன அடியும் தண்ணீர் வந்தது. இருப்பினும், அணைகளின் நீர்மட்டம் பெரிய அளவில் உயரவில்லை. 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையில் 22.2 அடியும், 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையில் 15.3 அடியும் நீர்மட்டம் உள்ளது.நாகர்கோவில் நகருக்கு குடிநீர் வழங்கும் முக்கடல் அணையின் நீர்மட்டம் மைனஸ் நிலையிலேயே உள்ளது. மலையோர பகுதிகளில் மழை பெய்து வருவதால், திற்பரப்பு அருவிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. அங்கு மிதமான அளவில் தண்ணீர் கொட்டி வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com