மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை;பாபநாசம் அணை நீர்மட்டம் கிடுகிடு உயர்வு

அணைகளை பொறுத்த வரை கடனா அணை நீர்மட்டம் இன்று 1 அடி உயர்ந்து 36 அடியை கடந்துள்ளது.
பாபநாசம் அணை
பாபநாசம் அணை(கோப்பு படம்)
Published on

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்கி பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த 1 வாரத்துக்கும் மேலாக கனமழை பெய்து வந்த நிலையில் நேற்று இரவு முதல் மழை சற்று குறைந்துள்ளது.இதனால் நேற்று கிடுகிடுவென உயர்ந்துள்ள அணைகள் நீர்மட்டம் சற்று குறைந்துள்ளது.143 அடி கொள்ளளவு கொண்ட மாவட்டத்தின் பிரதான அணையான பாபநாசம் அணையில் கனமழையால் நேற்று வினாடிக்கு 5 ஆயிரத்து 140 கனஅடி நீர் வந்தது. அணையின் நீர்மட்டம் 9½ அடி உயர்ந்து 58.80 அடியை எட்டியது.இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மழை குறைந்துவிட்டதால் அணைக்கு வினாடிக்கு 1402 கனஅடியாக நீர்வரத்து குறைந்துள்ளது. அணை நீர்மட்டம் இன்று மேலும் 3 அடி உயர்ந்து 61.40 அடியை எட்டியுள்ளது. மாவட்டத்தில் அதிகபட்சமாக கொடுமுடி யாறு அணை பகுதியில் 23 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

மாஞ்சோலை தேயிலை தோட்ட பகுதிகளிலும் மழை குறைந்துள்ளது. மாஞ்சோலை, ஊத்து, நாலுமுக்கு எஸ்டேட்டு களில் தலா 2 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. மணி முத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு தொடர்ந்து நீடிப்பதால் இன்று 2-வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் அருவியை பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தென்காசி

தென்காசி மாவட்டத்தை பொறுத்தவரை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி யிலும், அதனை ஒட்டிய செங்கோட்டை, தென்காசி, அச்சன்புதூர், ஆய்குடி உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. இன்றும் காலை முதலே பண்பொழி, செங்கோட்டை பகுதிகளில் கனமழை பெய்த வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிப்ப டைந்துள்ளது. பள்ளி, கல்லூரி செல்லும் மாண வர்கள் பெரிதும் சிரமம் அடைந்தனர்.

அணைகளை பொறுத்த வரை கடனா அணை நீர்மட்டம் இன்று 1 அடி உயர்ந்து 36 அடியை கடந்துள்ளது. ராமநதி அணை நீர்மட்டம் 2½ அடி உயர்ந்து 33½ அடியை கடந்துள்ளது. கருப்பாநதி அணை நீர்மட்டம் 1 அடி உயர்ந்து 39 அடியா கவும், குண்டாறு அணை நீர்மட்டம் 1 அடி உயர்ந்து 25 அடியாகவும் உள்ளது. மாவட்டத்தின் மிகப்பெரிய அணையான அடவிநயினார் அணையின் நீர்மட்டமும் 1 அடி உயர்ந்து 48 அடியை எட்டியுள்ளது. குற்றாலத்திலும் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. சாரல் மழைக்கு நடுவே இதமான காற்றும் வீசி வருகிறது. இன்று வார விடுமுறை நாள் என்பதால் ஐந்தருவி, பழையகுற்றாலம் அருவிகளில் காலையில் இருந்தே சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.

X

Daily Thanthi
www.dailythanthi.com