கறம்பக்குடியில் பலத்த காற்றுடன் கனமழை: 500 ஏக்கர் வாழை மரங்கள் சாய்ந்து சேதம்

கறம்பக்குடி பகுதியில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் 500 ஏக்கர் வாழைமரங்கள் சாய்ந்து சேதமானது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்து உள்ளனர்.
கறம்பக்குடியில் பலத்த காற்றுடன் கனமழை: 500 ஏக்கர் வாழை மரங்கள் சாய்ந்து சேதம்
Published on

கனமழை

கறம்பக்குடி பகுதியில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கனமழை பெய்ய தொடங்கியது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் மழை பெய்ய தொடங்கிய சிறிது நேரத்தில் பலத்த காற்றும் வீசத்தொடங்கியது. சுமார் 1 மணிநேரம் அடித்த பலத்த காற்று மற்றும் கொட்டி தீர்த்த கனமழையால் கறம்பக்குடி பகுதியில் இருந்த சிறிய மரங்கள் சாய்ந்து விழுந்தன.

கரும்பு, சோளம் உள்ளிட்ட பயிர்களும் சேதமாகின. சில இடங்களில் தென்னை மரங்களும் சாய்ந்தன. மின்கம்பிகளில் மரங்கள் விழுந்ததால் கறம்பக்குடி பகுதியில் மின்சாரம் முற்றிலும் தடைபட்டது.

வாழை மரங்கள் சாய்ந்தன

கறம்பக்குடி, கோட்டைகாடு, கருக்காகுறிச்சி, வாணக்கன்காடு, திருமணஞ்சேரி, மஞ்சுவிடுதி, பட்டமா விடுதி, செவ்வாய்பட்டி, வெட்டன்விடுதி, மழையூர் உள்ளிட்ட பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த 500 ஏக்கர் வாழை மரங்கள் பலத்த காற்று காரணமாக சாய்ந்து சேதமடைந்தன. இன்னும் 15 நாட்களில் அறுவடைக்கு தயாராக இருந்த வாழைமரங்கள் சாய்ந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்து கண்ணீர்விட்டனர். தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளதால் அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர். இதுகுறித்து கோட்டைக்காடு பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது:-

கஜா புயல், கொரோனா போன்ற பேரிடர் தாக்கத்தில் இருந்து தற்போதுதான் மீண்டு முழுமையான விவசாய பணியை தொடங்கினோம். சற்றும் எதிர்பாராத வகையில் சுமார் 1 மணிநேரம் வீசிய காற்று மற்றும் பலத்த மழை எங்கள் வாழ்வாதாரத்தை நிலைகுலைய செய்து உள்ளது.

இழப்பீடு வழங்க கோரிக்கை

பூவன், ரஸ்தாளி, கற்பூரவள்ளி என பலவகையாக வாழை இனங்கள் எங்கள் பகுதியில் சாகுபடி செய்யப்பட்டிருந்தன. ஒரு மரத்திற்கு ரூ.200 வரை செலவாகிறது. ஒரு மாதத்திற்குள் விற்று முதலாக வேண்டிய நிலையில் இன்று அனைத்தும் நாசமாகி உள்ளது. அரசு உரிய இழப்பீடு வழங்கினால் மட்டுமே எங்களால் இந்த நஷ்டத்தில் இருந்து மீளமுடியும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

இதற்கிடையே பாதிக்கப்பட்ட பகுதிகளை புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா மற்றும் வருவாய்த்துறை, வேளாண்மைதுறை அதிகாரிகள் பார்வையிட்டு விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினர். அப்போது பாதிப்பு குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com