திருத்தணி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்; கரும்பு ஏற்றி வரும் லாரிகளை ஒழுங்குபடுத்த கோரிக்கை

விடுமுறை மற்றும் முகூர்த்த தினத்தையொட்டி திருத்தணி முருகன் கோவில்களில் பொதுமக்கள் திரண்டதால் சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
திருத்தணி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்; கரும்பு ஏற்றி வரும் லாரிகளை ஒழுங்குபடுத்த கோரிக்கை
Published on

முருகன் கோவில்

திருத்தணி முருகன் கோவிலில் விடுமுறை நாட்களில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் பிரசித்தி பெற்ற இக்கோவிலில் முகூர்த்த நாட்களில் திருமணம் செய்தால் சிறப்பாக கருதி வருகின்றனர். இதையொட்டி முகூர்த்த நாட்களில் திருத்தணி கோவில் மற்றும் தனியார் மண்டபங்கள் நிரம்பி வழிவது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த நாட்களில் பொதுமக்கள் வெகுவாக கூடுவதால் திருத்தணி சாலையில் வாகன போக்குவரத்து நெரிசல் அதிகம் காணப்படும்.

போக்குவரத்து நெரிசல்

இந்நிலையில் நேற்று ஞாயிறு விடுமுறை மற்றும் முகூர்த்த நாள் என்பதால் திருமணத்திற்கு வந்த பொதுமக்களும் மற்றும் சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்களும் முருகன் கோவிலுக்கு திரண்டனர். இதனால் ஏற்பட்ட பக்தர்கள் கூட்டத்தால் அரக்கோணம் சாலை, மேட்டுத்தெரு, ம.பொ.சி.சாலை, கமலா திரையரங்கம், சித்தூர் ரோடு, சென்னை பை-பாஸ் சாலை உள்ளிட்ட பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

கரும்பு லாரிகள்

இதற்கிடையே, திருத்தணி, பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த கரும்பு பயிரிட்ட விவசாயிகள் கரும்புகளை வெட்டி டிராக்டர் மற்றும் லாரிகளில் திருத்தணி வழியாக திருவாலங்காட்டிற்கு எடுத்து செல்கின்றனர்.

அதில் திருத்தணி நகரின் முக்கிய பகுதியான சித்தூர் சாலை, சென்னை பைபாஸ் சாலையில் உள்ள குறுகலான பகுதிகளில் கரும்பு லாரிகள் சிரமப்பட்டு செல்வதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் இருசக்கர வாகனங்கள், கார், பஸ், ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்கள் செல்ல வழியில்லாமல் ஒரு மணிநேரத்திற்கு மேலாக நெரிசலில் சிக்கி தவித்தது.

குறைந்த அளவில் போலீசார்

கார்த்திகை தீபம் திருவிழாவையொட்டி திருத்தணி உட்கோட்டத்தில் உள்ள போலீசார் பாதுகாப்பு பணிக்காக திருவண்ணாமலை சென்றுள்ளனர். இதன் காரணமாக குறைந்த அளவில் போலீசார் பணியில் இருந்தனர். எனவே பகல் நேரத்தில் கனரக வாகனங்கள், கரும்புகளை ஏற்றி வரும் வாகனங்கள் ஆகியவற்றை இரவு 10 மணிக்கு மேல் திருத்தணி நகருக்குள் நுழைவதற்கு அனுமதிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com