மோடி ஆட்சியில் நாட்டின் பொருளாதாரம் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கிறது: சென்னையில் நடந்த கலந்தாய்வு நிகழ்ச்சியில் - ப.சிதம்பரம் கருத்து

மோடி ஆட்சியில் நாட்டின் பொருளாதாரம் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கிறது என்று சென்னையில் நடந்த கலந்தாய்வு நிகழ்ச்சியில் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.
மோடி ஆட்சியில் நாட்டின் பொருளாதாரம் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கிறது: சென்னையில் நடந்த கலந்தாய்வு நிகழ்ச்சியில் - ப.சிதம்பரம் கருத்து
Published on

சென்னை,

சென்னை சர்வதேச மையம் சார்பில் தேசத்தின் தற்போதைய நிலை- நாம் எங்கே சென்று கொண்டிருக்கிறோம் என்ற தலைப்பில் கலந்தாய்வு விவாத நிகழ்ச்சி சென்னை தியாகராயநகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று மாலை நடந்தது. இதில் இந்து குழுமத்தின் தலைவர் என்.ராம், முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் ஆகியோர் பங்கேற்று விவாதித்தனர்.

பொருளாதாரம், தற்போதைய அரசியல் சூழல், மத்திய அரசு நிறுவனங்களில் அதன் செயல்பாடுகள் குறித்து பல அடுக்கடுக்கான கேள்விகளை என்.ராம் முன்வைத்தார். இதேபோல கலந்தாய்வு விவாத நிகழ்ச்சியில் பார்வையாளர்களாக கலந்துகொண்டவர்களும் பல்வேறு கேள்விகளை எழுப்பினார்கள்.

இதற்கு பதில் அளித்து ப.சிதம்பரம் பேசியதாவது:-
நாட்டின் பொருளாதாரம் கடந்த காலங்களிலும் தேக்க நிலையை சந்தித்திருக்கிறது. ஆனால் அதில் இருந்து நாடு மீண்டு வந்துவிட்டது. ஆனால் இப்போது உள்ள தேக்கநிலை மிகவும் மோசமானது. மோடி தலைமையிலான ஆட்சியில் நாட்டின் பொருளாதாரம் ஐ.சி.யூ.வில் (தீவிர சிகிச்சை பிரிவு) இருக்கிறது. இதனை நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசில் பொருளாதார ஆலோசகராக இருந்த அரவிந்த் சுப்பிரமணியமே கூறியிருக்கிறார். கடந்த 5 காலாண்டுகளாவே பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து வந்திருக்கிறது. ஒட்டுமொத்த வளர்ச்சி வீதம் 8 சதவீதத்தில் இருந்து 4.5 சதவீதம் ஆக குறைந்திருக்கிறது.

இதில் உண்மை என்னவென்றால் ஒட்டுமொத்த வளர்ச்சி வீதம் 3 சதவீதம் தான் இருக்கும் என்று அரவிந்த் சுப்பிரமணியமே தெரிவித்திருக்கிறார். ஏனென்றால் மோடி அரசு வளர்ச்சி வீதத்தை மதிப்பிடும் முறையை மாற்றியிருக்கிறது. மோடி அரசு 2-வது முறையாக பதவி ஏற்ற 7 மாதத்தில் வளர்ச்சி, முதலீடு, வேலைவாய்ப்பு உருவாக்குதல், கிராம பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தவில்லை. மாறாக முத்தலாக் தடை மசோதா, காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கம், குடியுரிமை சட்ட திருத்த மசோதா உள்ளிட்ட அரசியல் மற்றும் மதரீதியிலான விஷயங்களில் கவனம் செலுத்துகிறது.

ஆர்.எஸ்.எஸ்.-ன் சித்தாந்தமான இந்துத்துவத்தை தீவிரப்படுத்துகிறது. நாட்டின் வளர்ச்சிக்கு என்று எதுவும் செய்யவில்லை. பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி. போன்றவற்றால் பொருளாதாரம் மோசமடைந்திருக்கிறது. பிரதமரின் அலுவலகமே அதிகாரம் மிகுந்ததாக இருக்கிறது. பிரதமர் அலுவலகத்தில் இருந்து வரும் குறிப்புகளின் படி தான் மந்திரிகள், அதிகாரிகள் செயல்படவேண்டியது இருக்கிறது. மந்திரிகள் மற்றும் அதிகாரிகளுக்கு சுதந்திரம் இல்லை. மன்மோகன் சிங் சிறந்த பொருளாதார நிபுணர். காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் அவரும், பொருளாதார நிபுணர்களோடு ஆலோசனை கேட்டே செயல்பட்டு வந்தார். மோடி அரசில் பொருளாதார நிபுணர்களிடம் ஆலோசனைகள் கேட்பது இல்லை.

மன்மோகன் சிங் அருகாமையில் தான் இருக்கிறார். ஆனால் அவரிடம் ஒரு பேச்சுக்கு கூட இதுவரை ஆலோசனை கேட்கவில்லை. எதிர்க் கட்சிகளாகவே மோடி அரசு பார்க்கிறது. குடியுரிமை சட்ட திருத்த மசோதா அரசியல் சாசனத்துக்கு எதிரானது. முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களை தனிமைப்படுத்தும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்காகவே குடியுரிமை கொடுக்கமாட்டோம் என்று சொல்லுகிறார்கள். ஒரே மதத்தை சேர்ந்தவர்களை ஒன்று திரட்டும் சட்டமாக இருக்கிறது. காஷ்மீரில் 75 லட்சம் மக்கள் ராணுவத்தின் பிடியில் இருக்கிறார்கள். அரசியல் கட்சி தலைவர்கள் வீட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். உறவினர்களிடம் பேசுவதற்கு தடை, ஆஸ்பத்திரிக்கு செல்ல தடை, செல்போன் வசதி இல்லை. இதுபோன்ற எந்த அடிப்படை வசதிகளும் அவர்களுக்கு செய்து கொடுக்கப்படவில்லை. இது வருத்தத்தை தருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

பார்வையாளராக பங்கேற்ற தந்தி டி.வி.யின் நிர்வாக இயக்குனர் பா.ஆதவன் ஆதித்தன், நாம் தனிநபர்களின் சுதந்திரத்துக்காக பணியாற்றி வருகிறோம். அந்தவகையில் தனிநபர்களின் சுதந்திரம் என்ற இலக்குக்காக ஊடகங்கள், கார்ப்பரேட் நிறுவனங்களின் பொறுப்புகள் என்னவாக இருக்க வேண்டும்? என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்து ப.சிதம்பரம் பேசும்போது, 2-வது முறையாக மோடி தலைமையிலான இந்த அரசு பதவி ஏற்று 7 மாதங்கள் ஆகிறது. இன்னும் 4 வருடங்களும், 5 மாதங்களும் இருக்கிறது. அவர்களிடம் 303 எம்.பி.க்கள் இருப்பதால் ஆட்சி நிலைத்திருக்கும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. இந்த சூழலில் தான் நாம் இருந்தாக வேண்டும். அனைவரையும் ஒருங்கிணைத்துச் சென்றால் தான் ஜனநாயகம் தழைக்கும். மக்களுடைய கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்க்கவில்லை என்றால் மக்கள் வீதிக்கு வந்து போராடுவார்கள். நான் என்ன செய்ய முடியும்? என்றார்.

இந்த கலந்தாய்வு நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பி. உள்பட பல்வேறு துறைகளை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com