

தமிழக சட்டசபையில் நேற்று சுற்றுலாத் துறை மானியக் கோரிக்கை விவாதத்திற்கு பிறகு, அத்துறையின் அமைச்சர் டாக்டர் மா.மதிவேந்தன் புதிய அறிவிப்புகளை வெளியிட்டு பேசியதாவது:-
லேசர் முப்பரிமாண ஒளி
கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலையை இரவிலும் கண்டு மகிழும் வகையில் லேசர் தொழில்நுட்ப உதவியுடன் முப்பரிமாண ஒளியூட்டம் அமைக்கப்படும். தமிழ் பண்பாடு மற்றும் பாரம்பரிய சின்னமாக விளங்கிய துறைமுக நகரமான பூம்புகார் புனரமைக்கப்படும்.தமிழ்நாட்டில் உள்ள 300 சுற்றுலாத் தலங்களில் சர்வதேசத் தரத்திற்கு இணையான வசதிகளை ஏற்படுத்த சுற்றுலா பெருந்திட்டம் தயாரிக்கப்படும். தமிழ்நாட்டில் உள்ள அணைக்கட்டுகள் மற்றும் நீர்த்தேக்கங்கள் சுற்றுலாத் தலங்களாக மேம்படுத்தப்படும்.
ஹெலிகாப்டர் சுற்றுலா
மாநிலத்தின் சுற்றுலா வளர்ச்சிக்காக, தமிழ்நாடு சுற்றுலா கொள்கை உருவாக்கப்படும். நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள கொல்லிமலை பல்வேறு வசதிகளுடன் முக்கிய சுற்றுலாத் தலமாக மேம்படுத்தப்படும். தமிழ்நாட்டின் சுற்றுலா இடங்களை மேம்படுத்த சுற்றுலாத் தலங்கள் வளர்ச்சித் திட்டம் உருவாக்கப்படும்.தமிழ்நாட்டின் முக்கிய சுற்றுலா தலங்களை இணைக்கும் விதமாக மதுரை, கொடைக்கானல் மற்றும் ராமேசுவரம் ஆகிய இடங்களில் ஹெலிகாப்டர் சுற்றுலா தொடங்க ரூ.1 கோடி மதிப்பீட்டில் ஹெலிகாப்டர் இறங்குதளம் அமைக்கப்படும்.
மிதவை உணவகம்
தமிழ்நாட்டில் மலைவாழிடங்கள், வனப்பகுதிகள் மற்றும் கடற்கரை பகுதிகளில் சாகச சுற்றுலா இடங்கள் மற்றும் சுற்றுச்சூழல் திறந்தவெளி முகாம்கள் ஏற்படுத்தப்படும். முட்டுக்காடு படகு இல்லத்தில் மிதவை படகுடன் கூடிய உணவகம் அமைக்கப்படும்.ஒகேனக்கல், ஜவ்வாது மலைப்பகுதி சுற்றுலா தலங்கள் பல்வேறு வசதிகளுடன் மேம்படுத்தப்படும். ராமேசுவரம் கூடுதல் வசதிகளுடன் சிறந்த சுற்றுலாத் தலமாக மேம்படுத்தப்படும். ஏலகிரியில் சாகச சுற்றுலா பல்வேறு பிரிவுகளுடன் மேம்படுத்தப்படும்.
மெரினாவில் படகு சவாரி
ராமேசுவரம் மற்றும் கன்னியாகுமரிக்கு இடையே சொகுசு கப்பல் சேவை மற்றும் படகு சேவை தொடங்குவதற்கான சாத்தியக்கூறு ஆய்வு மேற்கொள்ளப்படும். பிச்சாவரம் சுற்றுலா தலம் கூடுதல் வசதிகளுடன் மேம்படுத்தப்படும். முதலியார்குப்பம் படகு குழாம் மற்றும் அருகில் உள்ள தீவுப் பகுதியை கூடுதல் வசதிகளுடன் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.கோவை மாவட்டம் உக்கடம் மற்றும் வாலாங்குளம் ஏரியில் புதிய படகு குழாம்கள் ஏற்படுத்தப்படும். தமிழ்நாட்டில் உள்ள முக்கியமான மலைவாசஸ்தலங்கள், ஆன்மிகத் தலங்களில் கேபிள் கார் வசதியை ஏற்படுத்த சாத்தியக்கூறு ஆய்வு மேற்கொள்ளப்படும்.
சென்னை மெரினா கடற்கரையில் ராயல் மெட்ராஸ் யாட் கிளப் உடன் இணைந்து பொழுதுபோக்கு படகு சவாரி தொடங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.