'வணக்கம் டா மாப்ள'... கூமாபட்டியிலிருந்து... விருதுநகர் முன்னாள் கலெக்டர் பதிவு

சமூக வலைத்தளங்களை திறந்தாலே... ஏங்க கூமாபட்டிக்கு வாங்க என்று பரவும் வீடியோக்கள்தான் பார்க்க முடிகிறது.
'வணக்கம் டா மாப்ள'... கூமாபட்டியிலிருந்து... விருதுநகர் முன்னாள் கலெக்டர் பதிவு
Published on

சென்னை,

இணையத்தில் அடிக்கடி ஏதாவது ஒரு விஷயம் டிரெண்ட் ஆகிவிடுவதை பார்க்க முடிகிறது. அந்த வகையில் கடந்த சில நாட்களாக இன்ஸ்டகிராம், ட்விட்டர் என சமூக வலைத்தளங்களை திறந்தாலே... ஏங்க கூமாபட்டிக்கு வாங்க என்று பரவும் வீடியோக்கள்தான் பார்க்க முடிகிறது. இதனால், ஒரே நாளில் அகில உலக பேமஸ் ஆகிவிட்டது கூமாபட்டி.

இதனால், கூமாபட்டி என்ற கிராமம் இணைய தேடுதலில் முன்னிலையில் இருந்து வருகிறது. இதனால், அந்த கூமாபட்டி கிராமம் தமிழக அளவில் மிகவும் பேசும் பெருளாகவும் மாறி உள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் வத்திராயிருப்பு என்ற ஊருக்கு அருகில் மேற்குத் தொடர்ச்சி மலை அடி வாரத்தில்தான் இந்த கூமாப்பட்டி கிராமம் அமைந்துள்ளது.

இந்த நிலையில், கூமாபட்டி குறித்து விருதுநகர் முன்னாள் கலெக்டர் ஜெயசீலன் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-

உலகப் புகழ் கூமாபட்டியிலிருந்து... நேற்றிலிருந்து நண்பர்கள் அழைத்து என்னடா விருதுநகர் கலெக்டராக இருந்து இப்படி இன்டர்நேஷனல் Exotic Destination கூமாபட்டிய எங்களிடம் காட்டாமல் விட்டு விட்டாய் என்று கோபித்துக் கொண்டார்கள் . எனக்கே கொஞ்சம் அதிர்ச்சியாதான்டா இருக்கு பொறுங்க நாளைக்கு சும்மாதான் இருப்பேன். போய் பார்த்து போட்டோ எடுத்து போடுறேன் என்று சொன்னேன்..

கூமாபட்டி, ஸ்ரீவில்லிபுத்தூருக்கு மேற்கே மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தை ஒட்டி அமைந்துள்ள அழகான ஊர். பிளவக்கல் கோவிலாறு அணைகளுக்கு அருகில்,இரண்டு மிகப்பெரிய கண்மாய்களையும் கொண்ட ஆயக்கட்டுகள் நிறைந்த ஊர். மழைக்காலத்தில் கம்மாய்கள் நிரம்பி, கடல் போல் நிறைந்து, இயற்கை எழில் சூழ மிகுந்த ரம்மியமாய் காட்சியளிக்கும்.

அந்த வைரல் வீடியோவில், தலைவன் சொன்னதை போல் காதல் தோல்விக்கு தீர்த்தமாகவோ, இல்லை காதல் செட்டாவதற்கு தைலமாகவோ இருக்குமா என்பது குறித்து எந்த ஆவணக் குறிப்புகளும் இல்லை. தலைவனின் மற்ற தகவல்கள் 'ரீல்'ஸ்காக மட்டுமே; மற்றபடி, இது போன்ற கிராமப்புற பகுதிகளில் இயற்கை எழில் சூழ்ந்த இடங்களில் கிராம சுற்றுலாவை மேம்படுத்துவதற்கும், அழுத்தமான நகர்ப்புர வாழ்வியலில் இருந்து இளைப்பாறவும் 100 சதவீத கியாரண்டி உள்ளஇடம்.

எதிர்காலத்தில் இது கிராமச் சுற்றுலா வசதிகளுடன் மேம்பாடு அடையும் என எதிர்பார்க்கலாம். கூமாபட்டி கண்மாயின் இன்றைய புகைப்படங்கள், கடைசி படம் கடந்த ஆண்டு நீர் நிரம்பியிருந்தபோது நான் எடுத்தது! மிகவும் ரம்மியமான பகுதி. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com