தீரன் சின்னமலையின் வீர வரலாறு மாணவர்களுக்கு கற்பிக்கப்பட வேண்டும் - ராமதாஸ்

போரிட்டு வீழ்த்த முடியாமல், சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்ட தீரன் சின்னமலையின் வாழ்க்கை வரலாற்றை அனைவரும் அறிய வேண்டும்.
தீரன் சின்னமலையின் வீர வரலாறு மாணவர்களுக்கு கற்பிக்கப்பட வேண்டும் - ராமதாஸ்
Published on

சென்னை,

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தனது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது,

ஆங்கிலேயர்களை அஞ்ச வைத்த வீரத்திற்கும், தீரத்திற்கும் சொந்தக்காரரான கொங்கு நாட்டு மன்னர் தீரன் சின்னமலையின் 268-ஆம் பிறந்தநாள் இன்று பெருமையுடன் கொண்டாடப்படுகிறது. தமிழர்களின் வீரத்தை உலகுக்கு உணர்த்திய, ஆங்கிலேயர்களை வீழ்த்திய தன்னிகரில்லா தீரனின் பிறந்தநாளில் அவரது வீரத்தையும், தீரத்தையும் நினைவு கூர்வதில் பெரும் மகிழ்ச்சியும், பெருமையும் அடைகிறேன்.

ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகிலுள்ள செ.மேலப்பாளையம் எனும் சிற்றூரில் 1756-ஆம் ஆண்டில் பிறந்த தீரன் சின்னமலை, இளம் வயதிலேயே ஆங்கிலேயர் ஆதிக்கத்துக்கு எதிராக போராடத் தொடங்கினார்.

இன்றைய கேரளத்திலும், கொங்கு நாட்டின் சேலம் பகுதியிலும் இருந்த கிழக்கிந்திய கம்பெனிப்படை ஒன்று சேராவண்ணம் இடையில் பெரும் தடையாகச் சின்னமலை விளங்கினார். மைசூர் ஸ்ரீரங்கப் பட்டணத்தை ஆட்சி செய்து வந்த திப்பு சுல்தானுக்கும், ஆங்கிலேயர்களுக்கும் இடையில் நடந்த போரில் திப்பு சுல்தான் வெற்றி பெறுவதற்கு பெருமளவில் உதவிகளை செய்தார்.

1801-இல் ஈரோடு காவிரிக்கரையிலும், 1802-இல் ஓடாநிலையிலும், 1804-இல் அறச்சலூரிலும் ஆங்கிலேயர்களுடன் நடைபெற்ற போர்களில் சின்னமலை பெரும் வெற்றி பெற்றார். போரில் சின்னமலையை வெல்ல முடியாது என்பதை அறிந்த ஆங்கிலேயர்கள் சூழ்ச்சி மூலம், சின்னமலையைக் கைது செய்து சங்ககிரிக் கோட்டைக்குக் கொண்டு சென்று தூக்கிலிட்டனர். போரிட்டு வீழ்த்த முடியாமல், சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்ட தீரன் சின்னமலையின் வாழ்க்கை வரலாற்றை அனைவரும் அறிய வேண்டும்.

தீரன் சின்னமலையின் வீர வரலாறு மாணவர்களுக்கு கற்பிக்கப்பட வேண்டும். தீரன் சின்னமலையின் வரலாற்றை அடுத்த தலைமுறையினரும் அறிந்து கொள்ளும் வகையில் பாடப்புத்தகத்தில் சேர்க்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோல் இந்தியா முழுவதும் அனைத்து மாநில மொழிப்பாடங்களிலும் தீரன் சின்னமலையின் வாழ்க்கை வரலாற்றை சேர்க்க வேண்டும் என்று மத்திய அரசையும் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com