தியேட்டர்களில் அதிக கட்டணம் - தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு

ஓ.டி.டி.யால் தியேட்டர்கள் நீண்ட காலம் நீடிக்காது என்பதை உரிமையாளர்கள் சிந்திக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது.
சென்னை,
தியேட்டர்களில் புதிதாக வெளியாகும் திரைப்படங்களுக்கு முதல் நான்கு நாட்கள் அரசு நிர்ணயித்த டிக்கெட் கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் கூறி தேவராஜன் என்பவர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை விசாரித்த நீதிபதி, தியேட்டர்களில் அதிக கட்டணம் வசூலித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டார். மேலும், இன்றைய காலத்தில் தியேட்டர்களில் படம் பார்க்கும்போது வாங்கி சாப்பிடும் பாப்கார்ன் கூட வீட்டிற்கே டெலிவிரி செய்யும் நிலை உள்ளது என்றும், ஓ.டி.டி.யால் தியேட்டர்கள் நீண்ட காலம் நீடிக்காது என்பதை தியேட்டர்கள் உரிமையாளர்கள் சிந்திக்க வேண்டும் என்றும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.