

சென்னை,
சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் சி.டி.செல்வம், என்.சதீஷ்குமார் ஆகியோர் ஒரு ஆட்கொணர்வு மனுவை விசாரித்தனர். அந்த ஆட்கொணர்வு மனுவை நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் தாக்கல் செய்து இருந்தார்.
அந்த மனுவில், தன்னுடைய 17 வயது மகளை, 19 வயது வாலிபர் ஒருவர் கடத்தி சென்றுவிட்டார். எனது மகளை கண்டுபிடித்து கோர்ட்டில் ஆஜர்படுத்த நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
ஏற்க முடியாது
இந்த மனு மீதான விசாரணையின்போது, இன்ஸ்பெக்டர் ஆஜராகி, சிறுமி கடத்தல் வழக்கில், அந்த வாலிபரின் தாயாரை கைது செய்து சேலம் சிறையில் அடைத்துள்ளதாக தெரிவித்தார்.
இதுதொடர்பான ஆவணங்களை படித்து பார்த்த நீதிபதிகள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் போலீசார் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். இப்போதெல்லாம், காதல் வயப்பட்டு ஒரு பெண், தன் காதலனுடன் ஓடினால் கூட, அந்த காதலனின் பெற்றோர் மீது கடத்தல் வழக்குப்பதிவு செய்து, அவர்களை சிறையில் அடைத்து விடுகின்றனர். போலீசாரின் இந்த செயலை ஏற்க முடியாது என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
எச்சரிக்கையுடன்...
போலீசார் சமுதாய நலனுக்காக பணி செய்பவர்கள். இதுபோன்ற வழக்குகளில், கொஞ்சம்கூட சிந்திக்காமல், காதலனின் பெற்றோர், உறவினர்களை குற்றவாளியாக சேர்த்து விடுகின்றனர். அவர்களை கைது செய்து சிறையில் அடைத்து விடுகின்றனர். போலீசாரின் இந்த செயல் சமுதாய ரீதியான தவறாகும்.
அதேநேரம், எங்களது இந்த உத்தரவை போலீஸ் அதிகாரிகள் தவறாக புரிந்துகொண்டு, குற்றம் செய்த பெற்றோரை கூட கைது செய்யாமல் இருந்துவிடக்கூடாது. பெற்றோர் மீது நடவடிக்கை எடுப்பதற்கு முன்பு, போலீஸ் அதிகாரிகள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.
ஜாமீன்
அதனால், இந்த தீர்ப்பு நகலை அனைத்து போலீஸ் இன்ஸ்பெக்டர்களுக்கும் அனுப்பி வைக்க வேண்டும். அதற்காக, இந்த தீர்ப்பை, தமிழக டி.ஜி.பி.க்கு, சென்னை ஐகோர்ட்டு பதிவுத்துறை அனுப்பி வைக்க வேண்டும்.
தற்போது, இந்த வழக்கில் கடத்தல் குற்றச்சாட்டுக்கு ஆளான வாலிபரின் தாயாரை போலீசார் கைது செய்துள்ளனர். அந்த பெண்ணுக்கு நாங்கள் (நீதிபதிகள்) ஜாமீன் வழங்குகிறோம். அவரிடம் இருந்து ரூ.5 ஆயிரத்துக்கு சொந்த ஜாமீன் உத்தரவாதத்தை பெற்றுக்கொண்டு, அவரை சிறையில் இருந்து விடுவிக்க வேண்டும். காணாமல் போன மனுதாரரின் மைனர் மகளை கண்டுபிடித்து, வருகிற 28-ந்தேதிக்குள் இந்த கோர்ட்டில், நாமக்கல் மாவட்ட போலீசார் ஆஜர்படுத்த வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தர விட்டனர்.