புதிய சட்டமன்ற குழுக்களை உருவாக்கக்கோரி மு.க.ஸ்டாலின் வழக்கு செயலாளர் பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு

மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக்கிற்கு பதில் அளிக்கும்படி சட்டசபை செயலாளர் உள்ளிட்டோருக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
புதிய சட்டமன்ற குழுக்களை உருவாக்கக்கோரி மு.க.ஸ்டாலின் வழக்கு செயலாளர் பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
Published on

சென்னை,

தமிழக சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க.வின் செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் சென்னை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

வலுவான எதிர்க்கட்சி


தமிழக சட்டசபைக்கு கடந்த ஆண்டு நடந்த தேர்தலில் எங்கள் கட்சியை சேர்ந்தவர்கள் 89 பேர் வெற்றி பெற்று, வலுவான எதிர்க்கட்சியாக செயல்பட்டு வருகிறோம். ஆளுங்கட்சியை சேர்ந்தவர்களால் எங்களது நியாயமான கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாததால், கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் நடந்த சட்டசபை கூட்டத்தொடரில் இருந்து 80 தி.மு.க. உறுப்பினர்களை ஒருவாரம் இடைநீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார்.

இது ஒருபுறமிருக்க, தமிழ்நாடு சட்டபேரவை விதிகள் இந்திய அரசியலமைப்பு சட்டம் பிரிவு 208(1)-ன் கீழ் உருவாக்கப்பட்டது. இந்த விதிகளின்படி, புதிய ஆட்சி அமைந்து முதல் கூட்டத்தொடர் முடிந்தவுடன் சட்டமன்ற நிலைக்குழு, பொதுக்கணக்கு குழு, உரிமைக்குழு, விதிகள் குழு உள்பட 12 நிலைக்குழுக்களை உருவாக்கவேண்டும். இந்த 12 நிலைக்குழுக்களும் முக்கியமான பணிகளை மேற்கொள்ளும். தமிழக அரசின் செயல்பாடுகள், உயர் அதிகாரிகளின் செயல்பாடுகள், அரசின் திட்டங்கள், செலவினங்கள் உள்ளிட்டவைகளை இந்த குழுக்கள் ஆய்வு செய்யும்.

வெளியில் தெரியும்


இந்த குழுக்களின் பதவிக்காலம் ஒரு ஆண்டு. அதன்பின்னர், மீண்டும் இந்த குழுக்களை சபாநாயகர் உருவாக்க வேண்டும். இந்த 12 நிலைக்குழுக்களும் அமைக்கப்பட்டு அவை செயல்படத் தொடங்கினால் ஆட்சியில் நடைபெறும் முறைகேடுகள், தவறான நிர்வாகம் உள்ளிட்டவை வெளியில் தெரிந்துவிடும்.

இதனால், சபாநாயகர் இந்த நிலைக்குழுக்களை உருவாக்காமல் இருக்கிறார். இதுகுறித்து சட்டசபை கூட்டத்தொடரில் செப்டம்பர் 1-ந் தேதி கேள்வி எழுப்பியதற்கு, சபாநாயகர் இதுகுறித்து அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றார். ஆனால், அதன்பின்னரும் அறிவிப்பை வெளியிடவில்லை.

பதில் அளிக்க வேண்டும்


இதுகுறித்து டிசம்பர் 27-ந் தேதி, சபாநாயகரிடம் மனு கொடுத்தும் இதுவரை எந்த பதிலும் இல்லை. எனவே, 12 நிலைக்குழுக்களையும் அமைப்பதற்கு ஐகோர்ட்டு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.ராஜேந்திரன், இந்த மனுவுக்கு சட்டசபை செயலாளர், அவை முன்னவர், அரசு தலைமைச் செயலாளர் ஆகியோர் ஒரு வாரத்திற்குள் பதில் மனு தாக்கல் செய்யவேண்டும். விசாரணையை 19-ந் தேதிக்கு தள்ளிவைக்கிறேன் என்று உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com