பாலியல் வன்கொடுமையால் கர்ப்பமான சிறுமி... கருவை கலைக்க ஐகோர்ட்டு உத்தரவு

அந்த சிறுமியின் தற்போதைய கர்ப்ப காலம் 30 வாரங்களை கடந்துவிட்டது. ஆனாலும் அவரது உறவினர்கள் கருவை கலைக்க விரும்புகின்றனர்.
மதுரை ஐகோர்ட்
Published on: 

மதுரை,

ராமநாதபுரத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி பாலியல் வன்கொடுமையால் கர்ப்பமான வழக்கில், மருத்துவ ரீதியாக பாதுகாப்பானது எனக் கருதினால் கர்ப்பத்தைக் கலைக்க நடவடிக்கை எடுக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

பாலியல் வன்கொடுமை

ராமநாதபுரத்தை சேர்ந்த 16 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாள். இதில் அந்த சிறுமி கர்ப்பிணியானார். ஆனால் அந்த விவரம் உறவினர்களுக்கு தெரியவில்லை. பின்னர் அவரது உடலில் ஏற்பட்ட மாற்றங்களால் அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். இதில் அவர் கர்ப்பிணியாக இருந்தது உறுதியானது.

இந்தநிலையில் சிறுமியின் வயிற்றில் வள ரும் கருவை கலைக்க வேண்டும் என கடந்த 2 வாரங்களுக்கு முன்பு அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து கருவை கலைக்க அனுமதிக்க வேண்டும் என அவரது உறவினர்கள் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கு விசாரணை

அந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

போக்சோ சட்டத்தில் வரும் குற்றம் ஒன்றில் பாதிக்கப்பட்டவராக அந்த சிறுமி தெரிகிறார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். அந்த சிறுமியின் தற்போதைய கர்ப்ப காலம் 30 வாரங்களை கடந்துவிட்டது. ஆனாலும் அவரது உறவினர்கள் கருவை கலைக்க விரும்புகின்றனர்.

எனவே மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை டீன் உடனடியாக ஒரு மருத்துவக்குழுவை அமைக்க வேண்டும். இந்த குழு சிறுமியை பரிசோதிக்க வேண்டும். கர்ப்பத்தை கலைப்பது அவரது ஆரோக்கியத்திற்கோ அல்லது உயிருக்கோ எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று மருத்துவக்குழு கருதும்பட்சத்தில், அந்த கர்ப்பம் மருத்துவ ரீதியாக உடனடியாக கலைக்கப்பட வேண்டும்.

இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

X

Follow us on Google
Daily Thanthi
www.dailythanthi.com