திருவான்மியூர் டாஸ்மாக் கடை இருக்கும் நிலத்தின் ஆவணங்களை கேட்க தடை: ஐகோர்ட்டு உத்தரவு

இந்த நிலத்தை கடந்த 2004-ம் ஆண்டு டாஸ்மாக் நிர்வாகத்துக்கு வாடகைக்கு விட்டார்.
திருவான்மியூர் டாஸ்மாக் கடை இருக்கும் நிலத்தின் ஆவணங்களை கேட்க தடை: ஐகோர்ட்டு உத்தரவு
ஐகோர்ட்டு
Published on: 

சென்னை,

சென்னை திருவான்மியூரில் இருக்கும் ஒரு டாஸ்மாக் கடையின் நில ஆவணங்களை கேட்க தடை விதித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

ஐகோர்ட்டில் வழக்கு

சென்னை ஐகோர்ட்டில், அசோக்நகரைச் சேர்ந்த எஸ்.செல்லத்துரை என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘‘தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திடம் இருந்து திருவான்மீயூரில் 2 கிரவுண்ட் 380 சதுர அடி நிலத்தை வாங்கினேன். ஆனால், எனக்குப் பத்திரப்பதிவு செய்து தரவில்லை என்பதால், ஐகோர்ட்டில் கடந்த 2007-ம் ஆண்டு வழக்குத் தொடர்ந்தேன்.

இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, எனக்கு பத்திரப்பதிவு செய்துக் கொடுக்க வீட்டு வசதி வாரியத்துக்கு 2010-ம் ஆண்டு உத்தரவிட்டது. இதன்படி, அந்த நிலத்துக்குரிய ஒட்டுமொத்த தொகையையும் 2010-ம் ஆண்டு செப்டம்பர் 24-ந்தேதி செலுத்தி விட்டேன். கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நிலம் என் வசம் உள்ளது. நான்தான் அதன் உரிமையாளர்.

நிலம் டாஸ்மாக் நிறுவனத்திற்கு வாடகை

இந்த நிலத்தை கடந்த 2004-ம் ஆண்டு டாஸ்மாக் நிர்வாகத்துக்கு வாடகைக்கு விட்டேன். இந்த நிலையில் திடீரென நிலத்துக்குரிய பட்டா உள்ளிட்ட வருவாய் ஆவணங்களை கேட்டு கடந்த அக்டோபர் 27-ந்தேதி அம்பத்தூரில் உள்ள டாஸ்மாக் மேலாளர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இந்த நோட்டீசை ரத்து செய்ய வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.

நீதிபதி உத்தரவு

இந்த மனு நீதிபதி என்.செந்தில்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வக்கீல் ஆர்.வெங்கடேஷ் ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து, டாஸ்மாக் மேலாளர் நோட்டீசுக்கு தடை விதித்த நீதிபதி, இந்த மனுவுக்கு 2 வாரத்துக்குள் பதில் அளிக்கும்படி டாஸ்மாக் மேலாளருக்கு உத்தரவிட்டார்.

டாஸ்மாக் மூடல்

இதற்கிடையில், திருவான்மியூர் மதுக்கடையை டாஸ்மாக் மேலாளர் இழுத்து மூடிவிட்டார். "ஐகோர்ட்டு ஆவணங்கள் கேட்பதற்குத்தான் தடை விதித்துள்ளது. மதுக்கடையை திறக்க உத்தரவிடவில்லை என்று மேலாளர் கூறுகிறார். சென்னையில் அதிக மது விற்பனை நடைபெறும் கடையை டாஸ்மாக் மேலாளர் உள்நோக்கத்துடன் மூடியுள்ளார். இதுகுறித்து ஐகோர்ட்டை நாட உள்ளோம் என்று மனுதாரர் வக்கீல் கூறினார்.

X