ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர்களின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி - ஐகோர்ட்டு உத்தரவு

வழக்கின் விசாரணை எந்த முன்னேற்றமும் இல்லாததால் தங்களுக்கு ஜாமீன் வழங்கவேண்டும் என மனுதாரர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர்களின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி - ஐகோர்ட்டு உத்தரவு
Published on

சென்னை,

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 2024-ம் ஆண்டு ஜூலை 5-ந்தேதி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் பொன்னை பாலு, ஹரிகரன் உள்பட 30 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் பலர் ஜாமீனில் வெளியில் உள்ளனர்.

இந்தநிலையில் சிறையில் இருக்கும் பொன்னை பாலு, ஹரிகரன், மணிவண்ணன், சந்தோஷ் ஆகியோர் ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை நீதிபதி சி.குமரப்பன் விசாரித்தார். மனுதாரர்கள் தரப்பில், ''சுமார் 2 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளோம். வழக்கை விசாரித்து போலீசார் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துவிட்டனர்.

இந்தநிலையில், குற்றப்பத்திரிகையை ரத்து செய்த ஐகோர்ட்டு, கொலை வழக்கு விசாரணையை சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்து உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணை எந்த முன்னேற்றமும் இல்லை என்பதால், தங்களுக்கு ஜாமீன் வழங்கவேண்டும்'' என்று வாதிடப்பட்டது. இதற்கு போலீஸ் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ‘‘சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்ட ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்தும், இந்த வழக்கில் கைதானவர்களுக்கு ஜாமீன் வழங்கியதை எதிர்த்தும் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்குகள் சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளதால், இவர்களுக்கு ஜாமீன் வழங்கமுடியாது. எனவே, ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்கிறேன்'' என்று உத்தரவிட்டுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com